Skip to main content

நாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும் தயார் - டெல்டா பெண்களின் உருக்கம்...

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒரு வாரத்தை தொட்டுவிட்டது. ஏழாவது நாளான இன்று தேவாலயங்களில் பிரார்த்தனையும், வெட்டவெளியில் பெண்கள் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

hdc

 

 

தமிழகத்தின் நெற்களஞ்சியமாகவும், உணவுத்தேவையில் 70 சதவிகிதத்தை பூர்த்திசெய்துவரும், தஞ்சை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஆய்வுகளை நடத்த வேதாந்தா என்னும் ஸ்டெர்லைட் குழுமத்திற்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் காவிரி டெல்டாவின் விவசாயம் முற்றிலும் அழிந்து வறண்ட பாலைவனமாக மாறிவிடும். நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு செல்வதோடு குடிநீருக்கே ஆபத்து ஏற்படும். பஞ்சம் தலைவிரித்து ஆடும். இதை உணர்ந்த பொதுமக்கள் மற்றும் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

மீத்தேன் எதிர்ப்புக்கூட்டமைப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அனைத்துவிவசாயிகள் சங்கம் என போராட்டத்தில் ஈடுபட்டுவந்தாலும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்த திட்டமிட்டு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே விவசாயிகள் பொதுமக்கள் ஆங்காங்கே தனியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோட்டூர், நீடாமங்கலம் கூத்தநல்லூர், உள்ளிட்ட ஐந்து ஒன்றியங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
 

 

ஒப்பாரி போராட்டம் நடத்தி வரும் பெண்களிடம் விசாரித்தோம். "எங்களுக்கு அரைவயிறு, கால்வயிறு கஞ்சி ஊத்துறதே இந்த பூமிதான். இதையும் மலடாக்க துடிக்கிறார்கள். இதை மலடாக்கவிட்டுட்டு நாங்க உசுரு வாழ்ந்து என்ன பிரயோஜனம். இந்தத் திட்டத்தை நிறுத்துவதற்காக நாங்க உயிரைவிடவும் தயாராகிட்டோம். ஏற்கனவே காவிரியில் தண்ணீர் இல்லாமலும், மழை இல்லாலும், வாய்க்கா வரப்பு, குளங்கள் தூர் வாராமலும், கோடை மழையும் இல்லாமலும் பசுமையான பகுதியெல்லாம் வரண்டுகிடக்கு.  இந்த நிலைமையில இவங்க குழாய் போட்டு தண்ணீரை உறிஞ்ச சல்லடைபோல் பொத்தல் போட்டுட்டா எங்க நிலத்தோட நிலைமை என்ன ஆகும். வரும் காலத்துல நாங்க கஞ்சி இல்லாமல் சாவதைவிட, எங்கள் பிள்ளைங்களுக்காக போராடி சாகவும் தயாராகி விட்டோம்." என்கிறார்கள் உருக்கமாக.

 

 

சார்ந்த செய்திகள்