திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரத்தில் .இரண்டு இடம், போளுர் மற்றும் கலசபாக்கத்தில் தலா ஒரு இடம் என 4 இடங்களில் ஏ.டி.எம் மையத்தில் மிஷின்களை உடைத்து அதிலிருந்து பணத்தினை மர்ம கும்பல் கொள்ளையடித்துச் சென்றது. 72.5 லட்சம் கொள்ளையடித்த கும்பலைப் பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.. இந்நிலையில் இது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலையில் உள்ள ஒரு பொதுத்துறை வங்கியின் வாடிக்கையாளர்கள், ‘எங்கள் வங்கி கணக்கில் இருந்து எங்களுக்கே தெரியாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது’ என புகார் கூறியுள்ளனர். இதுகுறித்து போலிசில் புகார் சொல்லப்பட்டுள்ளது. இந்த தகவலை வெளியே சொல்லாமலேயே சைபர்செல் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் குறிப்பிட்ட பொதுத்துறை வங்கி ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி வைத்து வாடிக்கையாளர்களின் டேட்டாக்களை திருடி வேறு மாநிலத்திலிருந்து பணம் எடுத்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய போலீசார், “இரண்டு மாதங்களுக்கு முன்பே தெரிய வந்த இந்த விவகாரத்தை சரியாக விசாரித்திருந்தால் திருவண்ணாமலையில் வந்து மிஷின்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தியதை கண்டுபிடித்துவிட்டார்களே என்கிற பயம் டிஜிட்டல் கொள்ளையர்களுக்கு இருந்திருக்கும். இது அந்த கும்பலில் உள்ள மற்றவர்களுக்கு தெரிய வந்திருக்கும். போலீஸ் அலர்ட்டாகி இருக்கிறது என பயந்திருப்பார்கள். வங்கி ஏடிஎம்களில் ஸ்கிம்மர் கருவி வைத்து திருடியதைப் பிடிக்க முடியாததால் தைரியம் பெற்று இயந்திரத்தையே உடைத்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள்” என்றனர்.