2 நாட்களாகத் தொடர் மழையால், திடீரென வீட்டின் மீது தடுப்புச் சுவர் இடிந்து விழுந்த சம்பவம் குடியிருப்பு வாசிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை காலை 11.30 மணியளவில் குன்னூர் ராஜாஜி நகர் பகுதியில் இருக்கும் 20 வருடப் பழமையான தடுப்புச் சுவர் திடீரென குடியிருப்பு பகுதிக்குள் இடிந்து விழுந்தது.
தடுப்புச் சுவர் இடிந்து விழுந்ததில், சமி முல்லா என்பவரின் வீடு சேதமடைந்தது. அந்த சமயத்தில் வீட்டுக்குள் இருந்த ஷர்மிளா, சமி முல்லா, உபயதுல்லா ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராதவாறு அங்கேயே சிக்கிக் கொண்டனர். அதிர்ஷ்டவசமாக இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் வீட்டின் முன் பகுதியில் விழுந்ததால் வீட்டுக்குள் இருந்தவர்களுக்கு எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கும் வருவாய்த் துறையினருக்கும் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் முன்புறம் இருந்த கற்களை அகற்றிவிட்டு வீட்டில் இருந்தவர்களைப் பாதுகாப்பாக மீட்டு வந்தனர்.
மேலும், இடிந்து விழுந்த தடுப்புச் சுவர் அருகே உள்ள மற்ற குடியிருப்புகளிலும் சரியும் அபாயம் உள்ளதால் பாதுகாப்புக் கருதி வேறு பகுதிக்கு இடமாற்றம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்துச் சம்பவம் குறித்து சேதமடைந்த வீட்டு உரிமையாளர் பேசும்போது, இடிந்து விழுந்த தடுப்புச் சுவரால் எங்க வீட்டு முன்பகுதி முழுவதும் கற்களால் மூடப்பட்டிருக்கிறது. அவசரத் தேவைக்கு வெளியே செல்ல வேண்டும் என்றாலும் அது எங்களுக்குக் கடினமாக இருக்கிறது. சேதமடைந்த வீட்டை விரைவில் அப்புறப்படுத்த வேண்டும் என்று வீட்டு உரிமையாளர் கோரிக்கை விடுத்தார்.