கஜா புயலில் சேதமடைந்திருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பக்கத்து வீட்டில் உறங்கி கொண்டிருந்த மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அறந்தாங்கி அருகில் உள்ள மேல்மங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் அமராவதி (50). 30 ஆண்டுகளுக்கு முன்பு மணமேல்குடி அருகில் உள்ள கொடிக்குளம் கிராமத்தில் திருமணம் செய்தவர். கணவர் இறந்ததால் மீண்டும் தனது சொந்த ஊருக்கே வந்து ஒரு கொட்டகை அமைத்து தங்கினார். கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் கூலியில் வாழ்க்கை நடத்தினார். குழந்தைகள் இல்லை அதனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் அவரது தம்பி முருகன் மற்றும் பல ஊர்களிலும் உள்ள சகோதரிகள் அமராவதியை பார்த்துக் கொண்டனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி கடுமையாக தாக்கிய கஜா புயலின் தாக்கத்தால் அமராவதி, முருகன் உள்ளிட்ட அப்பகுதியில் உள்ள ஏராளமான வீடுகள் சேதமடைந்தது. பொருளாதாரப் பற்றாக்குறையால் ஒருவருடம் ஆகியும் இன்னும் அந்த வீடுகளை சீரமைக்க முடியாமல் தார்பாய்களை வீட்டின் கூரையாக அமைத்து தங்கியுள்ளனர். இதே போல தான் முருகனும் தார்பாய் கூரையுடன் பழைய ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையில் முருகன் வீட்டின் சுவர் நனைந்து ஊறி இருந்துள்ளது. நேற்று இரவு மிதமான தூரல் விழுந்துள்ளது. அப்போது முருகன் வீடு அருகில் உள்ள தனது சிமெண்ட் வீட்டில் அமராவதி தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் முருகன் வீட்டின் சுவர் அமராவதி வீட்டின் சுவர் மீது இடிந்து கொட்டியதால் அந்த சிமென்ட் கல் சுவர் மூதாட்டி அமராவதி மீது கொட்டியுள்ளது. இதில் அமராவதி சம்பவ இடத்திலேயே பலியானார்.
சத்தம் கேட்டு சகோதரர் முருகன் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்க்கும் போது அமராவதி இடிபாடுகளில் சிக்கி இறந்திருந்தார். சம்பவம் குறித்து வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் விசாரனை செய்து வருகின்றனர். புயல் தாக்கி ஒரு வருடம் ஆகியும் அதன் கொடூரம் இன்னும் உயிர்பலிகளை வாங்கிக் கொண்டிப்பது வேதனை அளிக்கிறது.