புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா காவல்துறை அலுவலகம் முன்பு இன்று "காவலர் சிங்கம்" என்ற சிலையுடன் கூடிய கணினி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த காவலர் சிங்கம் கணிணி மூலம், புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் புதுச்சேரியில் உள்ள சுற்றுலா தலங்கள் எந்தெந்த பகுதியில் உள்ளது. அதற்கான முழு விவரங்கள் அறியவே காவலர் வடிவிலான இந்த ரோபோ சிலை அமைக்கப்பட்டுள்ளது.
"காவலர் சிங்கம் " என்ற கணினி வடிவமைப்பின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி ஆகிய இருவரும் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, " புதுச்சேரியில் பிரெஞ்சு கலாச்சார சுற்றுலா, இன்பச்சுற்றுலா மற்றும் ஓய்வு சுற்றுலா என சுற்றுலா மூன்று வகைகளில் பிரிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் உயிருக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகளிடம் கனிவான முறையில் அணுகி அவர்களுக்கு உதவ காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போலிஸ் சிங்கம் மூலம் சுற்றுலா விவரங்களை எளிதில் அறிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.