பன்னீர்செல்வம் பார்க் ஜவுளி வணிக வளாகத்தில் நள்ளிரவில் கடை விரிவாக்க பணியின் போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள அப்துல் கனி ஜவுளி வணிக வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.55 கோடி மதிப்பில் கடந்த ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஜவுளி வணிக வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மொத்தம் 3 மாடிகளை கொண்டது இந்த ஜவுளி வணிக வளாகம். இந்த ஜவுளி வணிக வளாகத்தில் முதல் மாடியில் 194, 195 கடையை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு முருகேசன் என்பவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.
முருகேசன் இரண்டு கடைகளையும் இணைக்கும் வகையில் விரிவாக்க பணிகள் கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தார்.அதாவது இரண்டு கடையில் நடுவில் உள்ள சுவரை இடிக்கும் பணியில் கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி (50), அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (45) மற்றும் ஒரு பெண் பணியாளர் ஈடுபட்டிருந்தனர். நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சுவரை இடிக்கும் பணியில் சுப்பிரமணி, ஆனந்தன் ஈடுபட்டு கொண்டிருந்தனர். கடையின் வெளியே உரிமையாளர் முருகேசன், பெண் பணியாளர் நின்று கொண்டிருந்தனர்.
சுவர் இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென சுவர் இடிந்து விழுந்து சுப்பிரமணி, ஆனந்தன் மீது விழுந்தது. இதில் சுப்பிரமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். ஆனந்தன் படுகாயம் அடைந்தார். கடைக்கு வெளியே நின்று கொண்டிருந்த உரிமையாளர் முருகேசன் மற்றும் பெண் பணியாளர் இந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இந்த அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கம் கடையில் படுத்திருந்த ஜவுளி வியாபாரிகள் ஓடி வந்தனர்.
மேலும் இதுகுறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டவுன் டி.எஸ்.பி முத்துக்குமரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் விபத்தில் படுகாயம் அடைந்த ஆனந்தனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு பத்திரிக்கை அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சுப்பிரமணி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதனால் நள்ளிரவில் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
கடையின் உரிமையாளர் முருகேசன் மற்றும் பெண் பணியாளர் கடையின் வெளியே நின்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடை விரிவாக்க பணி குறித்து முருகேசன் முறைப்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.