கோவையில் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது சுவர் இடிந்து விழுந்து ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரன் கோவில் பின்புறம் உள்ள வடக்கு வீதியில் 200 மீட்டர் தொலைவிற்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ள நிலையில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியை இன்று ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மூடும் பணி நடைபெற்று வந்தது. இதற்கான பணியில் வேல்முருகன் என்பவர் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் உள்ள பழைய திருமண மண்டபம் ஒன்று அமைந்திருந்த பகுதியில் கால்வாய்க்காக தோண்டப்பட்ட குழியை மூடி கொண்டிருந்த பொழுது திருமண மண்டபத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதில் தொழிலாளர் வேல்முருகன் சிக்கிக் கொண்டதாக பேரூர் காவல் நிலையத்தில் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு வந்த போலீசார் தீயணைப்புத் துறையினருடன் சேர்ந்து நீண்ட நேரமாக சரிந்து விழுந்த சுவற்றுக்குள் சிக்கிய பணியாளர் வேல்முருகனை மீட்க முயன்றனர். ஆனால் இறுதியாக வேல்முருகன் சடலமாக மீட்கப்பட்டார். எப்போதுமே கால்வாய் அமைக்கும் பணியில் 20 பேர் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் இன்று கால்வாயை மூடுவதற்கான நிறைவு பணி என்பதால் சிலர் மட்டுமே பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
கால்வாய் மூடும் பணியின் போது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.