Skip to main content

வி.பி.சிங் தமிழ்நாட்டைத் தனது இரண்டாவது தாய்வீடாகக் கருதியதற்கு  சாட்சியங்களும், நிகழ்வுகளும்!

Published on 26/06/2019 | Edited on 26/06/2019

 

சமுகநீதிக்காவலர் வி.பி.சிங் 88ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி,மேனாள் அமைச்சர் க.பொன்முடி எம்.எல்.ஏ, பேராசிரியர் க.அருணன், இரா.முத்தரசன், பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா  ஆகியோர் ஆற்றிய சிறப்புரை:

 

v

 

’’ உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருப்போருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சட்ட விரோதமானது - அது ஒழிக்கப்படவேண்டும் என்பதும், பொதுத் துறைகள், தனியார்களுக்குத் தாரை வார்க்கப்படும் நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்பதும், சமுக நீதிக்குக் குரல் கொடுப்பது என்பது பி.ஜே.பி., மற்றும் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் சேர்த்து தான் என்பதும், இதனை அவ்வமைப்பில் உள்ள பார்ப்பனர் அல்லாதார் புரிந்துகொள்ளவேண்டும் என்பதும் சமுகநீதிக் காவலர் வி.பி.சிங்  பிறந்த நாள் விழாவின் மய்யக் கருத்தாக இருந்தன.

 

சமுகநீதிக் காவலர் மேனாள் இந்தியப் பிரதமர் விசுவநாத் பிரதாப் சிங் (வி.பி.சிங்) அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் (25.6.1931) நேற்று. மன்னர் குலத்தில் பிறந்த அந்த மனிதர் மண் குடிசையில் வாழும் மக்களைக் காதலித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையானது சமுகநீதி உயிர்க்காற்று (பிராண வாயு) என்று உறுதியாகக் கருதினார். அந்த உறுதியின் முன் பதவி என்னும் மேனகை கண் சிமிட்டிய போதும் சபலம் அவரை ஆட்கொள்ளவில்லை.


தந்தை பெரியாரைத் தேடி இருமுறை மாநில முதலமைச்சர் பதவி தேடி வந்து கதவைத் தட்டியபோதும் - நீ தேடி வந்த முகவரி இது இல்லை என்று எட்டி உதைத்து நாதியற்ற மக்களுக்காக நடு வீதியில் நின்று நாப்பறை கொட்டி போராட்டத் தீயிலே உருண்டு புரண்டு சிறைச் சாலை என்னும் அந்தக் கால வசதியற்ற கொட்டடிகளைச் சந்தித்துச் சந்தித்து, மக்கள் தொண்டு என்னும் மாசற்ற தொண்டறத்தைத் தன் தோளின்மீது போட்டுக் கொண்டு நாளும் உழைத்த தந்தை பெரியாரின் சமுகநீதித் தொண்டு அந்தச் சமுகநீதிக் காவலரை ஆகர்சித்து விட்டது - திராவிடர் கழகத்தின் மூலம் - திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள்மூலம். இதனை மாண்பு மிகு வி.பி.சிங் அவர்களே ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்துள்ளார்!

 

1950 ஆம் ஆண்டு குடியரசு நாளிலே இந்திய அரச மைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் முதற்கொண்டே தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிடைத்ததுபோலவே, பிற் படுத்தப்பட்ட வர்களுக்கும் முறையாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்க வேண்டும் அல்லவா!  தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களி டையே மித்திர பேதம் செய்யும் மகாமட்டகரமான மனு வாதிக் கூட்டத்தின் சூழ்ச்சியால் பறிபோனது.  சரியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு வி.பி.சிங் என்னும் மாமனிதர் பிரதமராக வந்தபோது (7.8.1990) பிற் படுத்தப்பட்டவர்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீடு பிரகடனப்படுத்தப்பட்டது.

 

v

 

இதற்காக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் அந்த மனித குலச் சுடரை நன்றி உணர்வோடு நினைவு கூரவேண்டாமா?  அந்தக் கடமையைத்தான் திராவிடர் கழகம் நேற்று சென்னையில் நிறைவேற்றியது. வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை - புரசைவாக்கம் தாணா தெருவில் சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் 88 ஆம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. ‘‘சமுகநீதி காப்போம்!'' என்ற சூளுரை அவ்விழாவின் தலைப்பாகக் கொடுக்கப்பட்டது பொருத்தம்தானே!

 

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மேனாள் தமிழக அமைச்சர் பேராசிரியர் முனைவர் க.பொன்முடி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், மார்க்சிய சிந்தனையாளர், எழுத்தாளர் பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.), மனிதநேய மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொரு கோணத்திலும் கருத்துரை புகன்றனர்.

 

தமிழ்நாட்டைத் தனது இரண்டாவது தாய்வீடாக வி.பி.சிங்  கருதியதை திராவிடர் கழகத் தலைவர் கூறியது மிகவும் சரியே!  ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து தேசிய முன்னணியாக 1988 இல் புதுடில்லியில் உருபெற்றபோது மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அதன் தொடக்க விழா தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னைக் கடற்கரையில் தானே நடந்தது.


பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை பிரகடனப்படுத்திய காரணத்தால் பார்ப்பன ஜனதா கட்சி (பா.ஜ.க.)யின் சதியால் வி.பி.சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட நிலையில், அவரை அழைத்து சிவப்புக் கம்பள வரவேற்பு அளித்து உச்சிமோந்தது தமிழ்நாடு அல்லவா! மேனாள் அமைச்சர் க.பொன்முடி அதனை நினைவூட்டினார்.

 

திராவிடர் கழகத்தின் அழைப்பை ஏற்று எத்தனையோ முறை தமிழ்நாட்டிற்கு வந்ததுண்டே அந்தப் பெருமகன்.   சென்னையில் அன்னை மணியம்மையார் சிலையைத் திறந்ததும் அவரே! திருச்சியில் பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகம் புதுக்கட்டடத்தையும் அவர்தானே திறந்து வைத்தார்.


தமிழர் தலைவர் ஆசிரியர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை பொது மருத்துவமனையில் இருந்தபோது, மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்தவராயிற்றே!  சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்படுகிறது என்ற செய்தியைச் செவியுற்ற தருணத்தில், திராவிடர் கழக இளைஞர் பட்டாளம் ‘நான், நீ' என்று போட்டிப் போட்டுக்கொண்டு அணிவகுத்து நின்றதே -  அப்படியே நெக்குருகிப் போய் விட்டார் நேர்மையான நெஞ்சுக்குச் சொந்தக்காரரான அந்தப் பெருமகன்.

 

தமிழ்நாட்டைத் தனது இரண்டாவது தாய்வீடாகக் கருதியதற்கு இன்னும் எத்தனையோ சாட்சியங்களும், நிகழ்வுகளும் உண்டுதான்.   மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அளித்து அதன் காரணமாக பிரதமர் என்னும் பதவி நாற்காலியை உதறித் தள்ளிய அந்த சான்றாண்மை மிக்க மாமனிதனுக்கு இந்தியாவில் உள்ள கோடானு கோடி ஒடுக்கப்பட்ட மக்கள் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் வகையில் இந்தியத் துணைக் கண்டம் முழுவதுமே பெருவிழா எடுக்கத் தவறியிருந்தாலும், திராவிடர் கழகம் தவறாமல் அந்தக் கடமையைச் செய்தமைக்காக விழா வில் கலந்துகொண்டு கருத்துரையாற்றிய பெருமக்கள் அனைவரும் மனந்திறந்து பாராட்டி நன்றியையும் கூறி னார்கள்.


பத்து மாதம்தான் ஆட்சியில் இருந்தாலும், அவர் சாதித்த அந்த சமுகநீதி சாதனை என்பது காலம் உள்ள வரைக்கும் கண்சிமிட்டும். அந்தக் காலம் உள்ளவரை வி.பி.சிங்கும் மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்று பொருள் என்ற பொருள் பொதிந்த வாசகத்தை வடித்துச் சொன்னார் ஆசிரியர்.


கைநீட்டி சம்பளம் வாங்கும் ஒவ்வொரு அரசு பணி யாளரும் அந்த ரூபாய் நோட்டில் காந்தியார் சிரித்தாலும் வி.பி.சிங்காகத்தான் அதனைப் பார்க்கவேண்டும் என்றும் கூறினார்.


பிரதமர் வி.பி.சிங்கால் பிற்படுத்தப்பட்டவர்களுக்குப் பிரகடனப்படுத்தப்பட்ட 27 விழுக் காடுக்கான சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு, இரண்டாண்டு களுக்குப் பிறகு அந்தத் தடை அகற்றப்பட்டு முதல் பிற்படுத்தப்பட்டவராக ராஜசேகர ஆசாரி என்பவருக்குப் பணியாணை பிறப்பித்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய சமுகநலத் துறை அமைச்சர் சீத்தாராம் கேசரி அவர்கள். தந்தை பெரியார் மீதும், நமது ஆசிரியர் மீதும் அளவற்ற அன்பும், மதிப்பும் கொண்டவர்.


ராஜசேகர ஆசாரி என்பவருக்கு முதல் ஆணை பிறப்பிக்கப்பட்டபோது, அதற்கு மூலகாரணமாக இருந்த வி.பி.சிங் அவர்கள் அமெரிக்காவில் உள்ள மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார்.   அவருக்கு அந்தத் தகவல் தெரிவிக்கப்படவேண்டும் என்று மத்திய அமைச்சர் சீத்தாராம் கேசரியும் விரும்பி னார். ஆசிரியர் அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வி.பி.சிங் அவர்களோடு தொலைப்பேசிமூலம் தொடர்பு கொண்டார். உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையிலும் பேசுபவர் வீரமணி என்று அறிந்ததும் அந்த உபாதையோடு அதேநேரத்தில் ஆர்வத்துடன் ஆசிரியருடன் பேசினார். ‘மகிழ்ச்சியான செய்தி - தங்களுக்குத்தான் முதலில் தெரிவிக்கவேண்டும் என்பதால், பேசுகிறேன்' என்று சொன்னபொழுது, அந்தத் தகவலைத் தெரிந்துகொள்வதில் ஆர்வம் காட்டிய பொழுது, ‘முதல் பிற்படுத்தப்பட்டவர் பணியை ஏற்றார்' என்று ஆசிரியர் அவர்கள் சொன்னதுதான் தாமதம். ‘மகிழ்ச்சி, மகிழ்ச்சி - எனக்கு இதைவிட மருந்தும், மருத் துவமும் எதுவும் இல்லை' என்று சொன்னதை ஆசிரியர் அவர்கள் நேற்றைய பொதுக் கூட்டத்தில் சொன்ன பொழுது, கூடியிருந்த மக்கள் நெகிழ்ந்து போனார்கள்.  இன்னொரு நெகிழ்ச்சியான ஒன்றையும் கழகத் தலைவர் கூறினார்.

v


டில்லியிலே பாம்நொலியில் கம்பீரமாக நின்ற பெரியார் மய்யத்தை சட்ட விரோதமாக டில்லி ஆளுநரின் அத்து மீறிய நடவடிக்கையால் (ஆர்.எஸ்.எஸ்.காரர்தான்) இடித்த நேரத்தில், அன்றைய பிரதமர் வாஜ்பேயி அவர்களை நேரில் சென்று நியாயம் கேட்கவேண்டும் என்று எண்ணியபோது, அதற்குத் துணை நின்றவர்கள் வி.பி.சிங் அவர்களும், நண்பர் வைகோ அவர்களும், சந்திரஜித் போன்றவர்களும் ஆவார்கள். நேரில் சந்தித்து டில்லியில் நடுநாயகமான இடத்தில் மாற்று இடம் கிடைக்க வழிகோலப்பட்டது என்பதெல்லாம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் அல்லவா!


சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய வி.பி.சிங் அவர்கள் உதிர்த்த வார்த்தைகளை இப்பொழுது நினைத் தாலும் மயிர்க்கூச் செறிகிறது.  டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்ட நேரத்தில், ‘‘நான் டில்லியில் இருந்திருந்தால் அந்தப் புல்டோசர் முன் என் மார்பை நிமிர்த்திக் காட்டி நின்றிருப்பேன்'' என்றாரே - அடடா, இப்படியொரு பெருமகனார் இந்தக் கழகத்தின்மீதும், அதன் கொள்கையின்மீதும், அதன் கர்த்தாவான தந்தை பெரியார்மீதும், அதன் நடத்துநர் ஆசிரியர்மீதும் அவர் வைத்திருந்த அன்பும், மதிப்பும் எடை போட்டுச் சொல்லப்பட முடியாதவைதான்.


வி.பி.சிங் இந்தியில் எழுதிய கவிதை நூல் த.சி.க. கண்ணன் அவர்களால் தமிழில் மொழி ஆக்கம் செய்யப் பட்டது. அந்த நூலின் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

அந்த விழாவில் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பொறியாளர் வா.செ.குழந்தைசாமி  (கவிஞர் குலோத் துங்கன்) அவர்களும் பங்கேற்று மதிப்புரை வழங்கினார். அந்த நூலுக்கான வருவாயை திருச்சியில் செயல்படும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கிய அந்தப் பெரு உள்ளத்தை மறக்கத்தான் முடியுமா?


சமுகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்கள்பற்றியும், மண்டல் குழு நடந்து வந்த பாதை குறித்தும், அந்தப் பரிந்துரைகளை அமலுக்குக் கொண்டுவருவதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளையும், 16 போராட்டங்களை நடத்தியது குறித்தும், காகாகலேல்கர் என்ற மராட்டிய பார்ப்பனர் தலைமையில் அமைந்த முதல் ஆணை யத்தைக் குறித்தும், ஆணையத்தின் தலைவரான பார்ப்ப னரின்அறிவு நாணயமற்ற தன்மை குறித்தும் பல தகவல்களை அணி அணியாக எடுத்துச் சொன்ன தமிழர் தலைவர் அவர்கள் முக்கியமாக வி.பி.சிங் விழாவில் நாம் சூளுரைக்க வேண்டிய, முடிவு செய்யப்படவேண்டிய, செய்து முடிக்கப்படவேண்டிய, வலியுறுத்தி பெற்றி பெறவேண்டியவற்றையும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.

 

1. தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களுக் கான சட்டப்படியான இட ஒதுக்கீட்டிற்குரிய இடங்கள் இன்னும் முழுமையாக நிரப்பப்படாத நிலையில், உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை அய்ந்தே நாள்களில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, உடனடியாக, போர்க்கால அடிப்படையில் செயல்பாட் டுக்குக் கொண்டு வந்தது எப்படி? ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அவசர கதியில் திறந்து விட்டது எந்த அடிப்படையில்?


இது பாரதிய ஜனதா கட்சியல்ல - ஆட்சியல்ல - பார்ப் பன ஜனதா கட்சி ஆட்சி என்பதற்கு இதைவிட அப்பட்ட மான எடுத்துக்காட்டும் வேண்டுமோ என்ற வினாவை எழுப்பிய கழகத் தலைவர், இந்த சட்டம் முறியடிக்கப்பட வேண்டும் என்று சூளுரைத்தார்.


(பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கதும், நினைவூட்டத்தக்கதுமாகும். இதே மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு வழி செய்யும் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுதும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது என்பதை நினை வில் கொள்க!)


இரண்டாவதாக ஆசிரியர் அவர்கள் அழுத்தமாகப் பதிவு செய்ததாவது:
பொதுத் துறை எல்லாம் இந்த ஆட்சியில் தனியார்த் துறைகளுக்கு மடை மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. இரயில்வே  கூட படிப்படியாக தனியார்த் துறைக்குக் கைநழுவிப் போய்க் கொண்டுள்ளது. பொதுத் துறை யிலிருந்து தனியார்த் துறைக்  குச் செல்லும்பொழுது நடை முறையில் சட்டப்படி அமலில் இருக்கும் இட ஒதுக்கீட்டின் கெதி என்ன - நிலை என்ன என்பது முக்கியமான கேள்வி யாகும்.


இந்த நிலையில், தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு தேவை - அதற்கான சட்டம் அவசரமாகத் தேவை! தேவை!! என்பதை வற்புறுத்தினார் தமிழர் தலைவர்.
மூன்றாவதாக அவர் சொன்னது மிகவும் முக்கிய மானதாகும். பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார்களில் தங்களைத் தெரிந்தோ தெரியாமலோ ஒப்படைத்துக் கொண்டுள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட மக்களுக்கான நேர்முகமான சிந்தனையைத் தூண்டும் மின்னல் வெட்டுப் போன்ற உண்மைக் கருத்தாகும் அது.


பா.ஜ.க., சங் பரிவார்களில் இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட - பார்ப்பனர் அல்லாத தோழர்களே! உங் களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்குமான கோரிக்கையைத் தானே நாங்கள் வைக்கிறோம். நாங்கள் வற்புறுத்தும் சமுகநீதி என்பது உங்கள் பிள்ளைகளுக்கும் சேர்த்து தானே!  இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாமல் எதிரிகளான பார்ப்பனர்களின் வில்லுக்கு அம்பாக ஆகிவிடலாமா? என்றது  மில்லியன் டாலர் கேள்வியாகும்.

 

பேராசிரியர் அருணன்
மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) அவர்கள் எழுப்பிய கேள்வி நுட்பமானது.
வி.பி.சிங்  மண்டல் குழுப் பரிந்துரையில் கூறியபடி, 27 விழுக்காடு இடங்களைப் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக வழங்கும் ஆணையைப் பிறப்பித்தார். பி.ஜே.பி.யினர் - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார்க் கூட்டம் அதனை ஏன் எதிர்க்கவேண்டும்? அவர்கள் கூற்றுப்படி அந்தப் பிற்படுத்தப்பட்டவர்களும், இந்துக்கள் இல்லையா? இந்துக்களுக்கான கட்சி, அமைப்பு என்று ஒரு பக்கம் சொல்லிக்கொண்டு இப்படி முரண்பாடாக நடந்து கொள்வது ஏன் என்ற வினாவை எழுப்பிய பேராசிரியர் அருணன் அவர்கள், அதற்கான விடையையும் வெளியே கொண்டு வந்துவிட்டார்.
பிற்படுத்தப்பட்டவர்களையும், தாழ்த்தப்பட்டவர் களையும் பயன்படுத்திக் கொண்டு பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நாட்டுவதுதான் அவர்களின் சூழ்ச்சியும், தந்திரமும் அதுதான் என்று பட்டாங்கப்படுத்தி விட்டார்.

 

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செய்யும் மித்திர பேதத்தின் முகமூடியைக் கிழித்தெறிந்தார்.
கடவுள் நம்பிக்கையாளரான நீங்கள் கடவுள் மறுப்பாளரான பெரியாருக்காக ஏன் வக்காலத்து வாங்கு கிறீர்கள் என்ற வினாவை எழுப்புகிறார்கள். இவர்கள் எதற்காக இந்த வினாவை எழுப்புகிறார்கள் என்பது நமக்குத் தெரியாதா? அவ்வளவு ஏமாளிகளா நாங்கள்?
தந்தை பெரியாரின் இறை மறுப்பையும் தாண்டி அவர்களின் சமுகநீதிக் கொள்கையும், அதற்காக அவர்கள் பட்டபாடும் பெரிது - பெரிதினும் பெரிது. மண்டல் குழுப் பரிந்துரைகள் செயல்பாட்டுக்கு வர வேண்டும் என்று திராவிடர் கழகமும், ஆசிரியர் வீரமணி அவர்களும் நடத்திய மாநாடுகள், போராட்டங்கள் கடவுள் மறுப்பைச் சார்ந்தவையல்ல என்று அழகாகப் பதிலடி கொடுத்தார்.
இன்னொரு முக்கிய தகவலைப் புள்ளி விவரத்துடன் எடுத்துக்காட்டியது கவனிக்கத்தக்கதாகும்.
மத்திய பி.ஜே.பி. ஆட்சி கொண்டுவரத் துடிக்கும் புதிய கல்விக் கொள்கையால் ஏற்படப் போகும் ஆபத்தின் விளைவை அது எச்சரிக்கையுடன் சுட்டிக் காட்டுகிறது!
95 விழுக்காடு தொடக்க வகுப்பில் சேரும் மாணவர் களின் எண்ணிக்கை 9 அல்லது 10 ஆம் வகுப்புக்கு வரும்போது, அது 79 விழுக்காடாக சரிகிறது. 11 அல்லது 12 ஆம் வகுப்புக்கு வரும்போது 51 விழுக்காடாக வீழ்ச்சி அடைகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய மக்களே என்று பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் சொன்னது மிகவும் கவனிக்கத்தக்கதாகும்.

 


தோழர் இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செய லாளர் தோழர் இரா.முத்தரசன் அவர்கள் தம் உரையில், வி.பி.சிங் அவர்களின் பெருங்குணத்தையும், பண்பு நலனையும் சிலாகித்தார்.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில் மட்டுமே ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார். அந்த ஒரு இடமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் செல்வராஜ் ஆவார்.

எண்ணிக்கையில் ஒருவர்தானே என்று அலட்சியப் படுத்தாமல், காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டு, காவிரி நடுவர் மன்றத்தை வி.பி.சிங் அமைத்ததை பொருத்தமாகச் சுட்டிக்காட்டிய தோழர் முத்தரசன் அவர்கள், இப்பொழுது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நாம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இருக்கிறோம் என்றாலும், இந்த வெற்றியைப் பின் தொடர்ந்து சமுகநீதியில் நாம் பெறவேண்டிய வெற்றியே மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டது முக்கியமானதாகும்.

இதன் பொருள் சமுகநீதிக் கொள்கையில் இந்தியத் துணைக் கண்டத்திற்கே தமிழ்நாடு வழிகாட்டக் கூடிய இடத்தில் இருக்கிறது என்பதாகும்.
மற்றொரு கருத்தும் நுட்பமானதாகும். மூடநம்பிக்கை எதிர்ப்பில், பகுத்தறிவுப் பிரச்சாரத்தில் நாம் கவனம் செலுத்தவேண்டும். தந்தை பெரியார் ஊட்டிய பகுத்தறிவு உணர்வுதான், அரசியலிலும், தேர்தலிலும் நமக்குக் கைகொடுத்திருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவான முடிவு எடுப்பதற்கு இந்தப் பகுத்தறிவுச் சிந்தனைதான் முக்கிய காரணம் என்று கூறியது சரியானதுதானே!
(பி.ஜே.பி.யும், ஆர்.எஸ்.எசும் தமிழ்நாட்டைக் குறி வைத்துக் காய்களை நகர்த்துவார்கள். தமிழ்நாட்டில் உள்ள முற்போக்கு அமைப்புகள், இளைஞர்கள், மாண வர்கள் மத்தியில் அமைப்பு ரீதியாக, சித்தாந்த ரீதியாக கூர்மை தீட்டுவது அவசியமே - அலட்சியமே கூடாது, கூடவே கூடாது).


பேராசிரியர் க.பொன்முடி
மேனாள் அமைச்சரும், தி.மு.க. சட்டப்பேரவை உறுப் பினருமான முனைவர் க.பொன்முடி அவர்கள், பகுத் தறிவாளர் கழகத்தில் பணியாற்றியபோது, ஆசிரியரிடம் மாணவனாக தாமிருந்து பெற்ற பயிற்சிகளையும், தமிழ்நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பகுத்றிவுப் பிரச்சாரம் செய்ததையும், மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்காக திராவிடர் கழகம் 42 மாநாடுகளை நடத்தியபோது, வடநாட்டில் இருந்துவரும் தலைவர்களின் ஆங்கில உரைகளை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பைப் பெற்றதையும், குறிப்பாக வி.பி.சிங் அவர் களின் உரையை மொழி பெயர்த்த வாய்ப்பை எல்லாம் பெருமிதமாகக் குறிப்பிட்டார்.


இந்தியாவிலேயே சமுகநீதிக்காக இயக்கம் நடத்தியது திராவிட இயக்கமே - நீதிக்கட்சி ஆட்சிதான் அதற்கான விதையை ஊன்றியது. மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்துவது உள்ளிட்ட அதன் பங்களிப்பு மகத்தானது.


வி.பி.சிங்  தந்தை பெரியார் கொள்கைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு பெரியாரிஸ்டாவார். அதனால் தான் சமுகநீதிக் கொள்கையில் உறுதியாக நின்றார்.
1990 இல் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டாலும், 27 சதவிகித இடங்கள் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் முழுவதுமாக வழங்கப்படவில்லை என்பதை நாம் உணரவேண்டும். இதனை அவ்வப்போது நமது ஆசிரியர் அவர்கள் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறார். பார்ப் பனர்களின் ஆதிக்கம் சகல துறைகளிலும் இருக்கும் நிலையில், ஏதோ அவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப் பட்டதுபோல, ஒரு தோற்றத்தை உருவாக்கப் பார்க் கிறார்கள் என்பதையும் எடுத்துக்காட்டினார் மேனாள் அமைச்சர் பொன்முடி.


சிறப்பான ஏற்பாடுகள்
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் இந்தக் கூட்டத்தை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. எழிலான மேடை, ஒலி, ஒளி அமைப்புகள், கழகக் கொடி அணிவகுப்புகள், பல வண்ண விளம்பர சுவரொட்டிகள் என்று அமர்க்களப்படுத்தியிருந்தனர். ஒரு வார காலமாக பம்பரமாகச் சுற்றிப் பணியாற்றியதற்குப் பலன் கிடைத்தது என்றே சொல்லவேண்டும்.

 

சமுகநீதிக்காவலர் வி.பி.சிங் 88ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மேனாள் பிரதமர் சமுகநீதிக்காவலர் வி.பி.சிங் அவர் களின் 88 ஆவது பிறந்த நாள் விழா, சமுக நீதி காப்போம் எனும் தலைப்பில் பொதுக்கூட்டம் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நேற்று (25.6.2019) மாலை சென்னை புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெற்றது.
தந்தை பெரியார் முழு உருவ ஒளி விளக்கு அலங்காரம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தாணா தெரு வெங்கும் கழகக் கொடிகள் அமைக்கப்பட்டு பொதுக்கூட் டத்தை நோக்கி அனைவரையும் அழைத்தன.மேடையில் சமுகநீதிக்காவலர் மேனாள் பிரதமர் வி.பி.சிங் படம் அழகுற அமைக்கப்பட்டு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.


தலைவர்கள் பலரும் உரையாற்றும் நிலையில் அனைவருமே குறித்த நேரத்தில் வருகைபுரிந்தார்கள். போட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக நாத்திகனின் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவுடன் செயல் விளக்க நிகழ்ச்சியாக நடைபெற்றது. பொதுமக்களும், வியாபாரி களும் நிகழ்ச்சியைக் கண்டு பயன்பெற்றனர்.


வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமையில் சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வரவேற்றார்.


கழக வெளியுறவு செயலாளர் கோ.கருணாநிதி, கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், இந் திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி பேராசிரியர் க.அருணன், மனிதநேயமக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், மேனாள் அமைச்சரும்,  திமுக சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் க.பொன்முடி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.


நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார்.


சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் வடசென்னை மாவட்டக் கழகத்தின்சார்பில் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.


கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய திமுக வட்ட செயலாளர் மனோகரன் அவர்களுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து பாராட்டினார்.
ஓட்டேரி கிளைக் கழகத் தலைவர் சிட்டிபாபு 76ஆவது பிறந்த நாளில் அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், நெய் வேலி வெ.ஞானசேகரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், வடசென்னை மாவட்டச் செயலாளர் தி.செ.கணேசன், துணைத் தலைவர் செம்பியம் கி.இராம லிங்கம், துணை அமைப்பாளர் சி.பாசுகர், பெரம்பூர் பா.கோபாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், மாணவர் கழகத் துணை செயலாளர் நா.பார்த்திபன், தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன், தென்சென்னை மாவடட்டச் செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, திருவொற்றியூர் மாவட்டச் செயலாளர் பா.பாலு,  திருவொற்றியூர் பகுதி தலைவர் பெரு.இளங்கோ, சோழிங்கநல்லூர் மாவட்டச் செயலாளர் விடுதலைநகர் பி.சி.ஜெயராமன், ஆவடி மாவட்டச் செயலாளர் க.இளவரசன், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், சி.வெற்றிசெல்வி,  வழக்குரைஞர் பா.மணியம்மை,

 

பூவை செல்வி, க.சுமதி, தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, கொரட்டூர் கோபால், வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலை வர் தளபதி பாண்டியன், ஆவடி மாவட்ட இளைஞரணி க.கலைமணி, வை.கலையரசன்,   சூளைமேடு கோவீ.ராகவன், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வன், வேலவன், பா.பார்த்திபன், முரளி, சுதன், அருள், ஆயிரம் விளக்கு சேகர், இளைஞரணி மாநில துணை செயலாளர் பொழிசை கண்ணன், சென்னை மண்டல இளைஞரணித் தலைவர் இர.சிவசாமி,  பெரியார் சமுக காப்பு அணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ், காரல்மார்க்ஸ், ஜெ.விஜயக் குமார், தாம்பரம் கு.சோமசுந்தரம், மா.குணசேகரன், சீனிவாசன், கண்ணதாசன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ், கூடுவாஞ்சேரி மா.இராசு, செ.உதயக் குமார், மாணவர் கழக மாநில துணை செயலாளர் யாழ்.திலீபன்,  இனநலம், பிரவீன், தொண்டறம், ஆற்றலரசி, நதியா உள்பட பலர் சென்னை மண்டல, மாவட்ட, பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.   கூட்ட முடிவில் மாவட்ட அமைப்பாளர் புரசை அன்புசெல்வன் நன்றி கூறினார்.


 

சார்ந்த செய்திகள்