உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.