இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ம.தி.மு.க. சார்பில் தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிடுகிறார். திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வரும் துரை வைகோவுக்கு செல்லும் இடமெல்லாம் பொதுமக்கள் மாலை அணிவித்தும், பூக்களைத் தூவியும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் தொண்டர்கள் புடைசூழ வேட்பாளர் துரை வைகோ நேற்று பிரச்சாரம் செய்து தீப்பெட்டி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பொன்மலை ரெயில்வே பணிமனையின் ஆர்மரிகேட் பகுதியில் ரெயில்வே ஊழியர்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி வாக்கு சேகரித்தார். தொடா்ந்து பெரியார், அம்பேத்கர், மகாத்மா காந்தி ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து பிரச்சார பயணத்தை தொடங்கினார். அங்கிருந்து, பொன்மலை அடிவாரம், ஜீவாவீதி, கொட்டப்பட்டு காமன்மேடை, ஐஸ்வர்யாநகர், ரன்வேநகர், எம்.ஜி.ஆர்.நகர், பேன்சிநகர், பொன்மலைப்பட்டி, பொன்னேரிபுரம், திருமலைநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, கம்பிகேட், மிலிட்டரி காலனி ஆகிய பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:- தி.மு.க. என்றும் தொழிலாளர்கள் பக்கம் தான் நிற்கும். அதுபோல் தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்றால் அங்கெல்லாம் வைகோ வந்து, அவர்களுக்கு உறுதுணையாக இருப்பார். நெய்வேலியில் 30 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒளிவிளக்கை ஏற்றியவர் வைகோதான். அந்த வகையில் அவருடைய மகன் துரை வைகோ தான் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். தொழிலாளர்களின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களியுங்கள் என்றார்.
பிரசாரத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் மு.மதிவாணன், இனிகோ இருதயராஜ் எம்.எல்.ஏ, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பூமிநாதன், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வெல்லமண்டி சோமு, தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் கழககுமார், மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார், மாநிலத் தொண்டர் அணி ஆலோசகர் ஆ.பாஸ்கரசேதுபதி, மாநில ஆபத்துதவிகள் அணிச் செயலாளர் சுமேஷ், முன்னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலச் செயலாளர் கேப்டன் சுபாஷ் ராமன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருச்சி கிழக்கு மாநகரம், கிழக்கு தொகுதிக்குட்பட்ட கமான் வளைவு, சந்து கடை, அந்தோணியார் கோவில் தெரு, அரியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று பிரச்சாரம் செய்தனர்.