தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் மொத்தம் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளும், தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் நாளை (02/05/2021) எண்ணப்படுகிறது.
75 வாக்கு எண்ணும் மையங்களில் துணை ராணுவத்தினர், ஆயுதப்படை, உள்ளூர் காவல்துறை உள்ளிட்ட 50,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. நாளை (02/05/2021) முழு ஊரடங்கைக் கண்காணிக்க தமிழகம் முழுவதும் சுமார் 50,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. குறிப்பாக, சென்னை காவல்துறைக்குட்பட்ட 4 வாக்கு எண்ணும் மையங்களில் 3,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றன. மேலும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் பின்பற்றப்படும் வழிமுறைகள்!
வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 08.00 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 08.00 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும். அதைத் தொடர்ந்து, காலை 08.30 மணிக்கு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை, தேர்தல் அதிகாரி, வேட்பாளர்கள் முன்னிலையில் தொடங்கும். ஒவ்வொரு மையத்திலும் 14 மேஜைகள் போடப்பட்டு தனித்தனி அதிகாரிகள் அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டிருக்கும்.
ஒரு கட்சிக்கு தலா ஒரு முகவர் மற்றும் தலைமை முகவர் என, ஒரு வேட்பாளருக்கு 15 முகவர்கள் இருப்பார்கள். பெட்டியில் வைக்கப்பட்ட சீல் சரியாக இருக்கிறதா என்பது, ஒவ்வொரு சுற்றின் போதும் உறுதிச் செய்யப்படும். தொகுதி, வாக்குச்சாவடி, வார்டு வாரியாக பதிவான வாக்குகள், முகவர்கள் முன்னிலையில் எண்ணப்படும். வாக்குப்பதிவு தினத்தன்று பதிவான வாக்குகளும், எண்ணப்படும் வாக்குகளும் ஒரே மாதிரி இருக்கிறதா என்பது உறுதிச் செய்யப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்றுகளின் அடிப்படையில் கணக்கிடப்படும். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் முடிவுகள் வெளியிடும் முன்பாக, முகவர்களின் கையொப்பம் பெறப்படும். சுற்று முடிவுகள், அறிவிப்பு பலகையிலும், தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்திலும் பதிவேற்றம் செய்யப்படும்.
பிற்பகலுக்குள் முன்னிலையில் இருப்பது யார்? வெற்றி பெறப்போவது யார்? என்பது ஏறக்குறையத் தெரிந்து விடும். வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு தேர்தல் நடத்தும் அதிகாரி சான்றிதழ் வழங்குவார். சான்றிதழை வேட்பாளர் (அல்லது) தலைமை முகவர் பெற்றுக் கொள்ளலாம்.