வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தொடங்குகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இது குறித்து தெரிவிக்கையில், “இன்று முதல் நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது. வடகிழக்கு பருவமழை அடுத்த 3 நாட்களில் தொடங்குகிறது. தற்பொழுது அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. மேலும் அக்டோபர் 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 23 இல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இந்த 2 காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலு குறைந்து காணப்படும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்த வரையில் தெற்கு மற்றும் மத்திய அரபிக் கடல் பகுதிகளுக்கு 23 ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறது. தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியை பொறுத்த வரையில் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மீனவரகள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அடுத்த 24 மணி நேரத்தை பொறுத்த வரையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரை பொறுத்த வரையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவித்தார்.