மகாத்மா காந்தியின் 154- வது பிறந்தநாளையொட்டி, இன்று (02/10/2022) காலை சென்னை கிண்டியில் உள்ள காந்தி மண்டபத்தில் அவரது சிலைக்கு அ.தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தியப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "தி.மு.க. அரசு குழப்பத்தின் உச்சியில், தெளிவில்லாத நிலையில் உள்ளது. தேசப்பிதாவுக்கு எத்தனையாவது பிறந்தநாள் என்பதில் கூட தி.மு.க. அரசு குழப்பத்தில் உள்ளது. முதலமைச்சரும், அமைச்சர்களும் தான் குழப்பத்தில் உள்ளார்கள் என நினைத்தால் அரசு அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் அலப்பறைகள் என்று ஒரு புத்தகமே எழுதலாம்.
பொதுக்குழு தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு திசைத் திருப்பப்படுகிறது, அதை தொண்டர்கள் நம்பமாட்டார்கள். உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் யாரும் சசிகலா பக்கம் செல்லமாட்டார்கள். பெருந்தலைவர் காமராஜரை சிறுமைப்படுத்தும் வேளைகளில் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க.வினர் ஈடுபடுகிறார்கள். காமராஜருக்கு கல்லறை கட்டிக்கொடுத்ததைக் கூட தி.மு.க. சொல்லிக் காட்டி சிறுமைப்படுத்துகிறது" என்று குற்றம்சாட்டினார்.