நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று (27/10/2024) நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று முடிந்தன.
இந்த மாநாடு தொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் தலைவர் விஜய் மூன்று முறை கடிதங்கள் வாயிலாக தொண்டர்களுக்கு பல்வேறு வலியுறுத்தல்களையும், கோரிக்கைகளையும் வைத்திருந்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தகுந்ததாக குழந்தைகள், சிறுவர்களை மாநாட்டிற்கு அழைத்து வர வேண்டாம், வயதானவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சியில் மாநாட்டை பார்க்கலாம். மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இருசக்கர வாகனத்தில் தொண்டர்கள் மாநாட்டுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.
அதிகாலையில் இருந்தே பெரும்பாலான தொண்டர்கள் மாநாடு நடக்கும் இடத்திற்குப் படையெடுத்து வருகின்றனர். காலை 10 மணிக்கு மேல் தான் தொண்டர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே தொண்டர்கள் உள்ளே புகுந்து நாற்காலிகளில் இடம் பிடிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் காரணமாக மாநாட்டு திடலில் நிரம்பி இருந்த தொண்டரில் ஒருவர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்ட அங்கிருந்தவர்கள், அங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மருத்துவ முகாமில் அனுமதித்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திண்டிவனம் அருகே உள்ள கிராமம் ஒன்றில் இருந்து மாநாட்டிற்கு வந்து தெரிய வந்துள்ளது.
மாநாட்டில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தாலும் தொண்டர்கள் முன்னதாகவே முண்டியைத்துக்கொண்டு இருக்கைகளில் அமர்ந்ததால் தற்பொழுது அங்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறையும் கட்சி நிர்வாகிகளும் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் வந்திருக்கும் தொண்டர்களை அழைத்து வரும் நிர்வாகிகளே காலை உணவையும், மதிய உணவையும் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்ததால் பலர் உணவு இல்லாமல் அங்கு அவதிப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.