விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே உள்ள நாவல் புதூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவரின் மனைவி மலர் நேற்று முன் தினம் கரும்புத் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் பாண்டியன் தலைமறைவாக இருந்தார். அவரை நேற்று கண்டமங்கலம் போலீசார் விழுப்புரத்தில் கைது செய்தனர்.
போலீசாரிடம் சிக்கிய பாண்டியன் அளித்த வாக்குமூலத்தில், “நான் கூலி வேலை செய்து வருகிறேன். அவ்வப்போது டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்வேன். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு எனது ஊரைச் சேர்ந்த மலர் என்பவரை திருமணம் செய்து கொண்டேன். அவருடன் குடும்பம் நடத்தி வந்த நிலையில், எங்களுக்கு பிள்ளைகள் பிறந்தன. அவர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டோம்.
இந்த நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருடன் என் மனைவி மலர் சுமார் 20 ஆண்டுகளாக தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதை அறிந்த நான் மனைவியை பலமுறை கண்டித்து, எச்சரித்தேன். ஆனால், என் மனைவி அந்த ஆண் நபருடன் உள்ள தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஊரில் பலர் என்னை கேலி கிண்டல் செய்து வந்தனர். இது மனைவி மலர் மீது எனக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வந்தது.
என் மனைவி என்னை மதிப்பதும் இல்லை. நான் கூறுவது எதையும் கேட்க மாட்டார். அவர் தன் இஷ்டம் போல நடந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு வந்தேன். குளிப்பதற்கு வெந்நீர் போட்டு தருமாறு கேட்டேன். அவர் மறுத்துவிட்டார் நானே வெந்நீர் போட்டு குளித்துவிட்டு இரவு சாப்பிட்டு படுத்து கொண்டேன். நள்ளிரவு ஒரு மணி அளவில் எழுந்து பார்த்தபோது மனைவி மலர் வீட்டில் இல்லை. இந்த நேரத்தில் எங்கே போய் இருப்பார் என்ற சந்தேகத்துடன் ஊருக்கு அருகாமையில் உள்ள கரும்பு தோட்டத்திற்கு சென்றேன். அங்கு என் மனைவி அவரது ஆண் நண்பருடன் ஒன்றாக இருப்பதை பார்த்தேன்.
இதனால் எனக்கு அதிர்ச்சியும் கோபமும் ஏற்பட்டது. என்னை பார்த்ததும் அந்த ஆண் நபர் ஓடிவிட்டார். ஆத்திரத்தில் என் மனைவி கழுத்தில் அளித்திருந்த தாலி சரடால் அவரின் கழுத்தை இறுக்கினேன். தாலி சரடு அறுந்தது. பிறகு அவரது புடவையால் கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். அவர் உயிர் இழந்ததை உறுதிப்படுத்திய பிறகு அங்கிருந்து திருவாண்டார் கோவில் பகுதிக்குச் சென்றேன். அங்கே மது குடித்தேன். பின்னர் ஏற்கனவே வேலை செய்த விழுப்புரம் பகுதியில் உள்ள எனக்குத் தெரிந்த ஒரு டீக்கடையில் சென்று படுத்துக் கொண்டேன். மறுநாள் காலை எங்காவது வெளியூர் தப்பி செல்லலாம் என்று எண்ணிக் கொண்டிருந்த போது போலீசார் என்னை கைது செய்தனர்” இவ்வாறு பாண்டியன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் பெயரில் விழுப்புரம் சிறையில் அடைத்துள்ளனர்.