தமிழியக்கம் சார்பில் " சூட்டி மகிழ்வோம் தூய தமிழ் பெயர்கள் " என்ற 46 ஆயிரம் பெயர்கள் கொண்ட புத்தக வெளியீட்டு விழா, திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழியக்க தலைவரும் வி ஐ டி வேந்தர் டாக்டர். கோ.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது; தற்போது 46 ஆயிரம் தூய தமிழ் பெயர்கள் கொண்ட புத்தகம் வெளியிடபட்டது. இந்த புத்தகத்தில் 23 ஆயிரம் ஆண் பிள்ளைகள் பெயரும் 23 ஆயிரம் பெண் பிள்ளைகள் பெயரும் உள்ளது. கல்லணை கட்டிய கரிகாலன் தன்னுடைய 3 பிள்ளைகளுக்கு தமிழில் தான் பெயர் சூட்டினார்.
உலகத்தில் சுமார் 6900 மொழிகள் பேசப்படுகிறது. இதில் மிகவும் தொன்மையான மொழிகள் 7 உள்ளது. இவற்றில் மிகவும் பழமையான மூத்த மொழி தமிழ். தமிழியக்கம் தொடங்கும் போது நமது நோக்கம் என்பது தமிழ் நாட்டிலே தமிழை பாதுகாப்பதும், அயல்நாட்டிலே தமிழை வளர்ப்பதும் தான். உலகத்தில் முதல் இலக்கண நூல் தமிழ் தான்.
3500 ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு தொல்காப்பியம் வந்துள்ளது. 1500 ஆண்டுகளுக்கு முன்பு சாதியே கிடையாது. அதன் பின்னர் தான் சாதி, இனம், மதம் போன்றவை வந்தது.
1916 ஆம் ஆண்டு மறைமலை அடிகள் தனித்தமிழ் இயக்கம் தொடங்கினார்கள். இதற்கு காரணம் தனித்தமிழில் எழுத வேண்டும் என்பதற்காக தான். நாம் அன்னிய மொழிகளுக்கு எதிரிகள் அல்ல. எல்லா மொழிகளையும் நேசிப்போம் தமிழை சுவாசிப்போம். மத்திய அரசு 1968 ஆம் ஆண்டு மும்மொழி திட்டம் நிறைவேறியது. இந்த மும்மொழி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் மொழி 90 நாடுகளில் பேசப்படுகிறது. மத்திய அரசு சமஸ்கிருதத்திற்கு உதவி செய்வது போல் தமிழ் மொழிக்கும் உதவ வேண்டும் என பேசினார்.
விழாவில் புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது: ’’தமிழ் மொழியை பேசுபவர்கள், எழுதுபவர்கள் தமிழ் மொழியை தொடர்ந்து பேணி காக்க வேண்டும். தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியில் பெயரிட வேண்டும் என்பதற்கு மட்டுமின்றி அதனை முறையாக கொண்டு வருவதற்காக இந்த புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது. மண மக்களுக்கு இந்த புத்தகத்தை கொடுக்க வேண்டும்.
எந்த மொழியையும் திணிக்கக் கூடாது, விரும்பி படித்தால் படிக்கலாம். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல . ஆனால் வேறு மொழியை நம் மீது திணித்தால் அதை எதிர்த்து போராடுவோம். மத்திய அரசு புதிய கல்வி கொள்கையால் மாநில மொழிகளை படிப்படியாக அழிக்க பார்க்கின்றனர். ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகள் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இதனால் வேலை வாய்ப்பு இழக்க நேரிடும். யாரும் நம் மொழியை கட்டுப்படுத்த முடியாது. யாராலும் எந்த சக்தியாலும் தமிழ் மொழியை அழித்து விட முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன்’’ என்று கூறினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது: ‘’மனிதன் பேசிய முதல் மொழி தமிழ் மொழி. மிகவும் தொன்மையான மொழி தமிழ் மொழி. திருக்குறளில் சமயம், நதி, கடல், தமிழ் போன்ற எந்த வார்த்தையும் கிடையாது. அதனால் தான் அது உலக பொதுமறையானது. இந்தித் திணிப்பு போராட்டத்தின் போது 8 பேர் தீக்குளித்து வீழ்ந்தார்கள் . எண்ணற்றவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்கள்.
என் மீது வழக்கு போடுவதை பற்றி நான் கவலைப்படுவதில்லை. இதை நான் நாடாளுமன்றத்திலே சொல்வேன். நான் மணமக்களுக்கு திருக்குறள் புத்தகம் கொடுக்கும் வழக்கம் கொண்டவன். மேலும் மணமக்களிடம் உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என கூறுவேன். மணமக்களுக்கு இந்த தூய தமிழ்பெயர்கள் கொண்ட புத்தகத்தை கொடுங்கள். விசுவநாதன் தமிழுக்கும், தமிழ் இனத்திற்காகவும் பாடுபட வேண்டும். இதில் உங்களை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டும்’’ என்றார்.