விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தளத்தை இன்று திறந்துவைத்த தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டி இதோ -
“எங்கள் கூட்டணியைக் கண்டு எதிர்க்கட்சிகளுக்குப் பயம். ஜெயிக்கப் போறோம்னு நாங்கள் கர்ஜிக்கிறோம்; அவர்கள் ஒப்பாரி வைக்கிறார்கள். தமிழகத்தின் வெற்றிதான் மத்தியில் ஆட்சியைத் தீர்மானிக்கும். எடப்பாடி சொல்லக்கூடியவர் நாட்டின் பிரதமராக வருவார். மத்திய ஆட்சியில் அதிமுக பங்குபெறும். நாடு அன்னிய சக்தியின் அச்சுறுத்தலில் உள்ளது. நாட்டுக்குத் தற்போது வலுவான, திறமையான இந்தியனே பிரதமராக வேண்டும்.
மோடிதான் வர வேண்டும் என்று இளைஞர்களும் மக்களும் விரும்புகிறார்கள். முதல்வரும், அதிமுகவில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களும் விரும்புகிறார்கள். மக்களுக்குக் கொடுக்கிறதுக்கு எங்களுக்கு மனம் இருக்கிறது. எதிர்க்கட்சியினரோ குறை சொல்கிறார்கள். அவர்கள் குறை சொல்லியே பழக்கப்பட்டவர்கள். நாங்கள் கொடுத்துப் பழக்கப்பட்டவர்கள். பந்தயக்குதிரைதான் அதிமுக. ஓடிக்கிட்டே இருப்போம். நெப்போலியன் குதிரை மாதிரி ஓடிக்கிட்டே இருக்கும். எங்க பின்னாடி குதிரையில் ஏறி வந்துக்கிட்டே இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். பக்கத்துல டீ கடையில் உட்கார்ந்து டீ சாப்பிட்டுக்கிட்டிருந்தால் உட்கார்ந்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான். நாங்க எல்லைக்குப் போயிருவோம்.
அதிமுக மகத்தான இயக்கம். 46 வயசு நிரம்பிய, 56 இஞ்ச் மார்பளவுகொண்ட, இளைஞர்களைக் கொண்ட இயக்கம். இந்த இயக்கத்தைக் குறை சொல்லி யார் பேசினாலும், அவர்களை நோக்கி ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம். சொற்களால் தாக்குதல் நடத்துவோம்.
எங்களைக் கட்டுப்படுத்த யாராலும் முடியாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்குப் பிறகு எடப்பாடி உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நடப்போம். அதற்காக, எங்களை வேடிக்கையாகப் பேசுவது, ஏளனமாகப் பேசுவதையெல்லாம் சகித்துக்கொண்டு செல்வதற்கு கீழ்மட்ட அதிமுக தொண்டன் விரும்பமாட்டான். ரிக்ஷாக்காரனை எம்.எல்.ஏ. ஆக்கியவர் எம்.ஜி.ஆர். சாதாரண கூலித்தொழிலாளியை எம்.எல்.ஏ. ஆக்கியவர் ஜெயலலிதா. அதிமுகவுக்கு வீர வரலாறு உண்டு. திமுகவுக்கு இருப்பது கோழை வரலாறு. ராமதாஸ் என்ன பாகிஸ்தான்காரரா? அவர் வீட்டில்போய் சாப்பிட்டால் என்ன தப்பு?” என்று வழக்கம்போல் அதிரடி கிளப்பினார் அமைச்சர்.