பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக, பெருந்திரள் மனு கொடுக்கும் போராட்டத்தை அறிவித்திருக்கின்றனர். தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வழியாக மனு கொடுக்கவிருக்கிறது பட்டாசுத் தொழில் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பு குழு. இன்று (21-12-2018) நடக்கவிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முழு கடை அடைப்பு செய்கிறது சிவகாசி வர்த்தகர்கள் சங்கம்.
‘பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்ட விதியை மாற்றி, புதிய விதியை ஏற்படுத்தும் அதிகாரம், அரசியல் சாசனத்தில் நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படவில்லை.’ என்பதைச் சுட்டிக்காட்டி, ‘பசுமைப் பட்டாசுகள் அல்லது குறைவான மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட வேண்டும்; விற்பனை செய்யப்பட வேண்டும்.’ என்ற உத்தரவானது, ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலையும் முடக்கிப்போட்டு, சிவகாசியில் அனைத்துப் பட்டாசு ஆலைகளையும் மூட வைத்துவிட்டது. தமிழக அரசு, பட்டாசுக்குத் தனிப்பட்ட விலக்களிப்பதற்கு மத்திய அரசினை வலியுறுத்தித் தீர்வு காண வேண்டும். அதற்கான வரைவினை தமிழக சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்பதே போராட்டக் குழுவின் கோரிக்கையாக உள்ளது.
‘தமிழ்நாட்டில் உள்ள சிவகாசிதானே! பட்டாசுத் தொழிலாளர்கள்தானே! எக்கேடுகெட்டால் எங்களுக்கென்ன?’ என்ற மத்திய பா.ஜ.க. அரசின் அலட்சியமே, 8 லட்சம் பட்டாசுத் தொழிலாளர் குடும்பங்களை வீதிக்குக் கொண்டு வந்துவிட்டது. பசுமைப் பட்டாசு என்ற பதத்திற்கு எவருக்கும் பொருள் தெரியவில்லை. சட்ட விதிகளிலும் இல்லை. அரசுக்கும் அதிகாரிகளுக்கும் விளங்கவில்லை. சரியான புரிதலின்றி வழங்கப்பட்ட ஆணை மற்றும் நிபந்தனைகளால், ஒட்டுமொத்த பட்டாசுத் தொழிலும் நிலைகுலைந்து போயுள்ளது என்ற வேதனையே பெருந்திரள் போராட்டம் நடத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.
‘பட்டாசுத் தொழிலாளர்களின் வலியை, தமிழகத்துக்கு மட்டுமல்ல.. இந்தியாவுக்கே உணர்த்த வேண்டும். தேசமே திரும்பிப் பார்க்க வேண்டும்.’ என்று முடிவெடுத்து, நாளை விருதுநகரில் பெருந்திரளாகக் கூடி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலத்துக்கு நடந்தே சென்று மனு கொடுக்கின்றனர். குறைந்தது ஒரு லட்சம் பேராவது இந்த ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று குழுவினர் போரட்டத்துக்கான ஆயத்தங்களில் ஈடுபட, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துக்கும், காவல்துறைக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. போராட்டம் குறித்த போஸ்டர்களும், மீம்ஸ்களும் மக்கள் கண்ணில்பட, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமும் துப்பாக்கிச்சூடும் உயிரிழப்புக்களும் நினைவுக்கு வந்து பீதியடைய வைத்திருக்கிறது.
திடீரென்று மக்கள் உணர்ச்சிவசப்பட்டாலோ, சாலை மறியல் செய்தாலோ, ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என்று கருதி, கூட்டத்தைக் குறைப்பதற்கான ஆலோசனையை போராட்டக்குழுவினரிடம் தெரிவித்திருக்கிறது. அக்குழுவினரோ, கூட்டம் அதிகரிக்க வேண்டுமே தவிர, குறையக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து, ஏற்பாடுகளைக் கவனித்து வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம், ‘என்னிடம் மனு கொடுப்பதற்கு எதற்காக சிவகாசியிலிருந்து விருதுநகர் வரவேண்டும்? நானே சிவகாசி வந்து வாங்கிக்கொள்கிறேன்.’ என்று கூறியும், போராட்டக்குழுவினர் கேட்பதாக இல்லை.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 1070 பட்டாசு ஆலைகளில் பணிபுரியும் மொத்தத் தொழிலாளர்களும் சாலைக்கு வந்து போராடவிருப்பதால், திக்திக் மனநிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துவருகிறது விருதுநகர் மாவட்ட நிர்வாகம்.