ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டம் முடிந்ததும் கலெக்டர் கதிரவன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
கரோனா வைரஸ் தாக்கத்தை தவிர்க்க ஈரோடு மாவட்டத்தில் 1400 பள்ளிகள் 66 கல்லூரிகள் 2088 அங்கன்வாடி மையங்கள் 42 சினிமா தியேட்டர்கள் 172 மதுபான பார்கள் 28 நீச்சல் குளங்கள் அடுத்து கால்நடை சந்தை ஜவுளி மார்க்கெட் போன்றவை மூடப்பட்டுள்ளன. அதேபோல் பெரிய ஜவுளி நிறுவனம் நகைக் கடைகளுக்கு விடுமுறை விட கேட்டுள்ளோம். தொடர்ந்து கோவில் திருவிழா உள்ளிட்ட வழிபாடுகள் குறைத்துக்கொள்ளவும் குறைந்த நபர்கள் மூலம் வழிபடவும் கேட்டுள்ளோம். வெளிநாட்டில் இருந்து ஈரோடு வந்த 64 பேரில் 41 பேருக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்ததால் பிரச்சினை எதுவும் இல்லை. மேலும் 27 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மாவட்டம் முழுவதும் 14 ஒன்றியங்களில் தலா ஒரு குழு என பதினான்கு கண்காணிப்பு குழு 14 மருத்துவ குழு அமைத்து கண்காணித்து வருகிறோம். ஈரோடு அரசு மருத்துவமனை கோவை அரசு மருத்துவமனை பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 48 படுக்கைகள் தனியாக வைத்து தேவையான வசதி செய்யப்பட்டுள்ளது. ரத்த மாதிரி எடுக்கப்படும் நபருக்கு 24 மணி நேரத்தில் பரிசோதனை மூலம் தெரிவித்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் கேரளா கர்நாடகா மாநிலங்களில் பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு அதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் ஈரோடு மாவட்டத்திலிருந்து கோழிகள் கர்நாடக கேரள மாநிலங்களில் விற்பனைக்காக கொண்டு செல்வதும் அங்கிருந்து வாகனங்கள் வருவதாலும் அந்த வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகிறது.
பன்னாரி பர்கூர் ஆகிய இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கால்நடை துறை மூலம் வாகனங்களுக்கு மருந்து தெளித்து அனுமதிக்கப்பட்டு வருகிறது குறிப்பாக வாகன டயர்கள் பறவைகள் கொண்டுசெல்லும் பகுதிகளிலும் மருந்து தெளித்து ஈரோடு மாவட்டத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை அதற்கான அறிகுறிகள் பண்ணைகளில் தென்பட்டால் தேவையான பரிசோதனை செய்யப்படும். என்றார்.