





கண்களைக் கட்டிக்கொண்டே 25 விதமான செயல்களைச் செய்து சாதனை படைத்திருக்கிறார் ஹர்ஷ நிவேதா. விருதுநகரைச் சேர்ந்த இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கிறார். 12 வயதே ஆன இவர், தன்னுடைய இரு கண்களையும் கருப்புத் துணியால் கட்டியடி புத்தகம் வாசித்தார்; அப்துல் கலாம் படம் வரைந்தார்; க்யூப் சரிசெய்தார்; சைக்கிள் ஓட்டினார். இதுபோன்ற 25 வகையான செயல்களை 45 நிமிடங்களில் செய்துமுடித்து, Universal achievers book of records மற்றும் Future Kalam Book of Records ஆகிய சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தார். இது உலக சாதனை மட்டுமல்ல; உலகிலேயே முதன் முறையாக நடத்தியிருக்கும் சாதனை ஆகும். இவர், 2018-ல் உத்தித பத்மாசனத்தை 174 வினாடிகள் செய்து கின்னஸ் சாதனை படைத்தவர்.
இதே விருதுநகரில், இரட்டையர்களான விஷாலினியும் அஸ்வினும் நீண்ட நேரம் (1 மணி 12 நிமிடங்கள் 23 விநாடிகள்) நீரில் மிதந்தபடி யோகா செய்தும், முட்டையை தங்களின் மணிக்கட்டால் உடைத்தும் சாதனை படைத்துள்ளனர். மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சித்தார்த்தன். இவர், ஆஸ்திரேலியா சென்று மாற்று திறனாளிகளில் மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்கான சர்வதேச பாரா ஒலிம்பிக்கில், சைக்ளிங் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இரட்டையர் பிரிவில் பங்கேற்று, 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 20 கி.மீ. சைக்ளிங் பிரிவில் பாரா ஒலிம்பிக்கில் இந்திய அளவில், அதுவும் தமிழகத்தைச் சேர்ந்தவர் பதக்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.
மதுரை, சிக்கந்தர் சாவடி பெத்சால் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் படித்துவரும் சித்தார்த்தன், முறையான பயிற்சி பெறாமலே பதக்கம் வென்றிருக்கிறார். தமிழகத்திலிருந்து மொத்தம் 6 பேர் தேர்வானார்கள். நிதிவசதி இல்லாததால், அவர்களில் 5 பேர் போட்டியில் கலந்துகொள்ளவில்லை. ஜெராக்ஸ் கடை வைத்திருக்கும் திருமாறன், ரூ.4 லட்சம் கடன் வாங்கி செலவு செய்து, தன் மகன் சித்தார்த்தனை பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வைத்திருக்கிறார். பொருளாதார நெருக்கடியால் உள்ளுக்குள் வேதனையுடன் தவிக்கும் அவர், “தமிழக அரசு நிதி உதவியும் முறையான பயிற்சியும் வழங்கினால் இனிவரும் போட்டிகளில் சித்தார்த் தங்கப்பதக்கமே வெல்வான்.” என்று உறுதிபடச் சொல்கிறார். சாதனை மாணவர்களை வாழ்த்துவோம்!