தேனி மாவட்டத்தில் 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து கடந்த 3 மாதங்களாக சாலையோரம், குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளையும், விளம்பர பதாகைகளையும் அகற்றி வருகின்றனர். மரங்களில் ஆணி அடிப்பதால் அவற்றின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறுவதோடு, மரங்களுக்கும் உயிர் இருப்பதால் இந்த திருவிழா என்ற பெயரில் களப்பணி செய்வதாக தன்னார்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆணி பிடுங்கும் களப்பணியில் தொடர்ச்சியாக பல புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அந்த வகையில் தேனியில் 'ஆணி பிடுங்கும் போட்டி வீரபாண்டியில் 'ஆங்கிலப் புத்தாண்டு ஆனந்த களப்பணி', பாலார்பட்டியில் 'தைப்பொங்கல் தன்னார்வலர் களப்பணி' என புதிய வடிவில் சிந்தித்து ஆணிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.
நேற்று காதலர் தினத்தன்று 'மரங்களை காதலிப்போம்' என்ற பெயரில் வைகை அணை பகுதியில் ஆணி பிடுங்கும் பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ச்சியாக மக்களை நோக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் தன்னார்வலர்கள் திடீரென மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர். கண்டனத்தை பதிவு செய்வது என்பது ஆர்ப்பாட்டம், போராட்டம் என்ற வடிவிலோ அல்லது சுவரொட்டிகள் வழியிலோ தெரிவிப்பது வழக்கம், ஆனால் தேனி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மரம் நடுதல் என்ற பெயரில் கண்டனத்துக்கு புதிய வடிவம் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தேனி மாவட்ட தன்னார்வலர்கள் குழுவை சேர்ந்த சிலரிடம் கேட்டபோது,
நாங்கள் எந்த அமைப்பின் பெயரிலும் களப்பணி மேற்கொள்ளவில்லை. முழுக்க முழுக்க தன்னார்வலர்களின் களப்பணி இது. இதற்கு பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆதரவளித்து வலிமை மிக்க பயணமாக மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ஆணி பிடுங்கும் திருவிழா நடத்தி வருகிறோம். இதுவரை 36 களப்பணிகள் நடத்தி உள்ளோம். சுமார் 130 கிலோ ஆணிகளை மரங்களில் இருந்து அகற்றி உள்ளோம். மக்களிடம் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
சமீபத்தில் கோம்பை அருகே தே.ரெங்கநாதபுரத்தில் நடந்த அணி பிடுங்கும் களப்பணியில் புதுமணத் தம்பதியினர் திருமணக் கோலத்தில் வந்து ஆணி பிடுங்கினர். இது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அதே நேரத்தில் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் எங்களுக்கு இதுவரை எந்தவிதமான ஒத்துழைப்பும் அளிக்கப்படவில்லை. வைகை அணையில் நேற்று ஆணிகளை பிடுங்கிக் கொண்டு இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் தனது காரை நிறுத்தி, டிரைவரை அனுப்பி எங்களை கண்டித்தார். மரங்களை பாதுகாக்கவே இதை செய்வதாக கூறியதால் டிரைவர் சாந்தமானார். அதுபோல் மரங்களில் ஆணிகளை அகற்றவும், மேற்கொண்டு மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வேண்டும் என்று கலெக்டர் பல்லவி பல்தேவ்விடம் இரண்டுமுறை மனு அளித்துள்ளோம்.
முதல் மனு அளித்து 3 மாதங்கள் ஆகிறது. இன்னும் எந்த நடவடிக்கையும் இல்லை. மனுவின் மீதான பதில் கூட எங்களுக்கு கிடைக்கப் பெறவில்லை. அதேநேரத்தில் தொடர்ச் சியாக மாவட்டத்தில் உள்ள சாலைகளின் ஓரம் மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் செல்லும் திட்டச் சாலையிலும் மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு வருகிறது. ஊரக வளர்ச்சித்துறைக்கு கட்டப்படும் புதிய கட்டிடம் முன்பு இருந்த மரங்களும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டு உள்ளது. இந்த மரங்களுக்கு இரவு, பகல் பாராமல் தன்னார்வலர்கள் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். ஆனால், மாவட்ட அதிகாரிகள் துளியும் விழிப்புணர்வு இன்றி அவற்றை வேரோடு பிடுங்கி எறிய காரணமாகி இருக்கிறார்கள் எனவே மக்களை விட மாவட்ட நிர்வாகத்துக்கு தான் மரங்களின் பயன் குறித்த விழிப்புணர்வு தேவைப் படுவதாக கருதுகிறோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மரங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து மரம் நடுவது என்றும், பயணம் செய்யும் போது மரங்களுடன் செல்வது என்றும் திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டமோ, ஆர்ப்பாட்டமோ செய்வது எங்களின் எண்ணம் இல்லை ஆனால் நிர்வாகத்திற்கு மரங்கள் வளர்த்தல் பற்றிய புத்தியை புகட்ட வேண்டும். எல்லா வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் எண்ணம். அதனால் தான் மாவட்ட நிர்வாகத்துக்கு கண்டனம் என்ற பெயரில் மரக்கன்று நடுதல் மரக்கன்றுகளை உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளோம். இதை பார்த்தாவது மாவட்ட நிர்வாகம் மரங்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என்று கூறினார்கள்.
இந்த தன்னார்வலர்களின் கண்டனம் கூட புதிய முயற்சியாகவே இருக்கிறது. சில இடங்களில் ஆட்சியாளர்கள் புதுமையை புகுத்துவார்கள் ஆனால், தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் புதுமையை புதுகுத்தி வருகின்றனர். அதை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையாளராக இருந்து கண்டனத்தை சம்பாதிக்காமல் மரங்களை பாதுகாக்கும் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பது தன்னார்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது அதை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் கவனிப்பாரா? என்பதை பொருந்திருந்து பார்ப்போம்.