விருதுநகர் மாவட்டத்தில் சில இடங்களில் உரிமம் இல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்தனமாக பட்டாசு உற்பத்தி செய்வது தொடர்ந்து நடக்கிறது. சில காரணங்களால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இதனைக் கண்டு கொள்வதில்லை.
சாத்தூர் அருகிலுள்ள அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து என்பவர், அந்த கிராமத்தில் ஸ்ரீ வேணி என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார். தனது பட்டாசு கடைக்கு அருகிலேயே செட் போட்டு சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வழக்கம் போல் அந்த செட்டில் பட்டாசுகளைத் தயாரித்தபோது, திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிலாளர் ஒருவரது உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த வெடி விபத்தில் வேறு யாரேனும் சிக்கியுள்ளார்களா எனத் தேடி வருகின்றனர்.
விசாரணையில் உயிரிழந்தவர் கோட்டைப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. பட்டாசு கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றும், டூ வீலர் இரண்டும் தீயில் கருகிச் சேதமடைந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வெடி விபத்து குறித்து ஏழாயிரம் பண்ணை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.