Skip to main content

பெண் ஏட்டுக்கு டார்ச்சர்! -இன்ஸ்பெக்டர் மீது பாலியல் புகார்!

Published on 22/04/2022 | Edited on 22/04/2022

 

police

 

“போனில் வேண்டாம், நேரில் பேசவேண்டும்..” என்று அழைத்தார், விருதுநகர் காவல்துறையில் பணியாற்றும் அந்த உயரதிகாரி. சந்திப்பின் தொடக்கத்திலேயே “சுதந்திர நாட்டில், பெண்களும் சுதந்திரமாக இருக்கட்டுமே என்று ஆண்களில் பலரும் நினைப்பதில்லை. அதனால், உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். கட்டிட சித்தாள் தொடங்கி காவல்துறை வரையிலும் பாலியல் அத்துமீறல் நடக்கிறது. பணிபுரியும் இடங்களில் நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து 70 சதவீத பெண்கள் புகாரளிப்பதில்லை என்றொரு புள்ளிவிபரம் இருக்கிறது. காரணம், ஒரு ஆண் தவறு செய்தாலும் வஞ்சிக்கப்படுவது பெண் என்பதே.  குற்றம் செய்யும் ஆண்களுக்கு இதுவே சாதகமாக அமைந்துவிடுகிறது.” என்றவர், திருத்தங்கல் காவல் நிலையத்தில் பெண் காவலர் ஒருவரை, இன்ஸ்பெக்டர்  ‘டார்ச்சர்’ செய்த விவகாரத்துக்கு வந்தார்.  

 

என்ன நடந்ததாம்?

 

virudhunagar police incident

 

திருத்தங்கல் காவல்நிலைய ஆய்வாளர் முத்துப்பாண்டி, அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் மகளிர் ஏட்டு ஒருவரை தவறான வழிக்கு அழைத்திருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த பெண் ஏட்டு, இந்த விவகாரத்தை சிவகாசி டி.எஸ்.பி. பாபு பிரசாந்திடம் முறையிட்டுள்ளார். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது.

 

திருத்தங்கல் காவல் ஆய்வாளர் முத்துப்பாண்டியைத் தொடர்புகொண்டோம். “ஆமா, அந்தம்மா டிஎஸ்பிகிட்ட புகார் கொடுத்திருக்கு. டி.எஸ்.பி. விசாரிக்கிறாரு. நான் போன்ல கான்டாக் பண்ணி, வாட்ஸ்-ஆப்ல அனுப்புன எவிடன்ஸ் ஏதாவது அந்தம்மாகிட்ட இருக்கும்ல. அதை அவங்ககிட்ட கேளுங்க. நான் அப்ரோச் பண்ணி போன்ல பேசினேன்.. அப்புறம்,  நைட்ல வாட்ஸ்-ஆப்ல தொந்தரவு பண்ணுனேன்னு சொல்லுறாங்க இல்லியா? அதுக்கெல்லாம் அவங்ககிட்ட ஆதாரம் இருக்கான்னு கேளுங்க. அந்தம்மா எஸ்.ஐ. கன்ட்ரோல்ல இருக்காங்க. நான்,  சர்கிள் இன்ஸ்பெக்டர். அவங்க என் கன்ட்ரோல்ல இல்ல. எனக்கெதிரா எவிடன்ஸ் இருந்தா, தாராளமா அவங்க கொடுக்கட்டும். ஒரு விஷயத்த தெரிஞ்சிக்கோங்க. அந்தம்மா சரியா டூட்டி பார்க்கிறது இல்ல. அதனாலதான், மாத்துங்கன்னு ரிப்போர்ட் அனுப்பினோம்.  போன மார்ச் மாசம் 14-ஆம் தேதியே டிரான்ஸ்பர் பண்ணச் சொல்லி ரிப்போர்ட் பண்ணிருக்கோம்.. அதுக்கப்புறம்தான், ஒரு மாசம் கழிச்சு அந்தம்மா இந்த பிரச்சனைய கொண்டு வருது.” என்றார்.

 

அந்த பெண் ஏட்டை தொடர்புகொண்டோம். “டி.எஸ்.பி. ரொம்ப ஹானஸ்ட் ஆனவங்க. விசாரணை நிச்சயம் நேர்மையா நடக்கும். இதைப் பத்தி பேசுறதுக்கு எனக்கு விருப்பம் இல்ல..” என்று முடித்துக்கொண்டார். ‘காவல்துறை ஆய்வாளர் சம்பந்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு என்பதால், விவகாரம் வெளியே தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும் என மகளிர் காவலர்கள் மத்தியில் சந்தேகம் நிலவுகிறதே?’ எனக் கேட்டோம், காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம்  “விசாரணை நடக்கிறது. தவறு நடந்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்.” என்றார்.

 

ஒரு மகளிர் ஏட்டு, காவல்நிலைய ஆய்வாளர் மீது பொய்யான பாலியல் புகாரா கொடுத்திருப்பார்?

 

 

சார்ந்த செய்திகள்