விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், அயன் சல்வார்பட்டி கிழக்கு தெருவில் வசிக்கும் காளீஸ்வரன் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அதே கிராமத்தில் வசிக்கும் இன்னொரு சமுதாயத்தைச் சேர்ந்த பாலஜோதி, சல்வார்பட்டி பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த காளீஸ்வரனிடம் புகையிலை கேட்டிருக்கிறார்.
அவரிடம் காளீஸ்வரன் “என்கிட்ட புகையிலை இல்ல அண்ணே..” என்றிருக்கிறார். அண்ணன் என்று உறவுமுறை சொல்லி அழைத்ததால் கோபமான பாலஜோதி, “நீ என்ன ஜாதி? என்னையா அண்ணேன்னு கூப்பிடுற?” என்று காளீஸ்வரனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்கிறார். அங்கிருந்து காளீஸ்வரன் வீட்டுக்குச் சென்றுவிட்ட நிலையில், இரவு 8 மணியளவில் பால்ராஜ், ராம்குமார், இசக்கிமுத்துராஜ், கிருஷ்ணசாமி ஆகியோருடன் கிழக்குத் தெருவுக்குப் போன பாலஜோதி “இவன்தான் என்னை அண்ணேன்னு சொன்னான். இவனை அடிங்கடா..” என்று கூற, அந்த நான்கு பேரும் காளீஸ்வரனைத் இரும்புக்கம்பியால் தாக்கி கழுத்தை நெறித்துள்ளனர்.
காயம்பட்ட காளீஸ்வரன் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், வெம்பக்கோட்டை காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார். பாலஜோதி உள்ளிட்ட 5 பேர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்கு பதிவாகியுள்ளது.