விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் இழுபறி என்பது வத்திராயிருப்பு மற்றும் நரிக்குடி யூனியன் ஆகிய இரண்டு யூனியன்கள் மட்டுமே. வத்திராயிருப்பில் ஜான்பாண்டியனின் கட்சியான தமமுக உறுப்பினர் ரேகாவை ஆளும்கட்சி வளைத்துவிட, திமுக தரப்பு சைலன்ட் ஆனது. ஆனாலும், தலைவர் தேர்தல் நாளான இன்று, "அதிமுக தரப்பில் உறுப்பினர் ஒருவர் போட்ட ஓட்டு செல்லாது, தெரியாமல் தவறாகப் போட்டுவிட்டார். அவரை மறுவாக்கு பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்" என்று அதிமுக உறுப்பினரான சிந்துமுருகன் பிரச்சனை செய்ய, வெளியிலிருந்த அதிமுகவினர் வத்திராயிருப்பு யூனியன் அலுவலகத்துக்குள் புகுந்து கம்ப்யூட்டரை உடைக்க, அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அதிமுக தரப்பில் ஒரு ஓட்டு செல்லாத ஓட்டு என்றாகிவிட்டதால், இரு கட்சிகளும் சமபலத்தில் குலுக்கல் நடத்த வேண்டிய நிலையில், 'குலுக்கல் நடத்தவும் கூடாது; வெற்றியை அறிவிக்கவும் கூடாது' என்று தகராறு செய்து, அதிகார பலத்தைக் காட்டியிருக்கின்றனர் அதிமுகவினர். அதனால், வத்திராயிருப்பு யூனியனில் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நரிக்குடி ஒன்றியத்திலும் இதே அக்கப்போர்தான். திமுக – 6, அதிமுக – 5, அமமுக – 1, சுயேச்சைகள் – 2 என்பதே உறுப்பினர்களின் எண்ணிக்கை. ஒரே ஒரு அமமுக உறுப்பினரையும், சுயேச்சை ஒருவரையும் அதிமுக தரப்பு தங்கள் பக்கம் இழுத்துவிட, இன்னொரு சுயேச்சை கொள்கை சார்ந்து திமுக ஆதரவு நிலை எடுத்துவிட்டார். அதனால், இரு கட்சிகளும் 7:7 என சமநிலைக்கு வந்தன. இந்தச் சூழ்நிலையில்தான் குலுக்கல் நடைமுறையை மேற்கொள்ள வேண்டிய நிலை வந்தது. அதனால் நரிக்குடி யூனியன் அலுவலகமே பரபரப்பானது.
இதையடுத்து அந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் புகுந்த 4 பேர் குண்ட கும்பல் கற்களை வீசியது. தாக்குதலைத் தடுக்க முயற்சித்த டி.எஸ்.பி.வெங்கடேசன் அரிவாளால் வெட்டப்பட்டதாக தகவல் பரவியது. நரிக்குடி யூனியன் தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், டி.எஸ்.பி.யை தாக்கியது சர்வ பலமும் கொண்ட ஆளும்கட்சியே என திமுக தரப்பிலும், டிஎஸ்பியை தாக்கிய கருப்புச்சட்டை அணிந்த நபர் திமுக புள்ளியின் தோட்டத்தில் வேலை பார்ப்பவர் என அதிமுக தரப்பிலும் மாறி மாறி குற்றம் சாட்டுகின்றனர். இதற்கிடையில் டி.எஸ்.பி.யை அரிவாளால் வெட்டினார்கள் என்று யாரோ புரளி கிளப்பிவிட்டார்கள் என்று காக்கிகள் தரப்பில் சொல்கிறார்கள். டி.எஸ்.பி. வெங்கடேசனோ “சேரைக் கையில் எடுத்து கும்பலைத் தடுத்தேன். அவர்கள் வைத்திருந்த ஆயுதம் பட்டு கையில் சின்னதாக காயம் ஏற்பட்டுவிட்டது. அவ்வளவுதான்.” என்கிறார்.
நடந்தது உண்மையிலேயே வன்முறையா? ஆளும்கட்சியினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை நாடகமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது. மொத்தத்தில், நரிக்குடி யூனியன் சேர்மனாவது யார்? என்ற போட்டா போட்டியில், ‘ஒருவேளை அந்தத் தரப்பு யூனியனைக் கைப்பற்றிவிட்டால்?’ என்று சந்தேகம் ஏற்பட்டுவிட, இன்னொரு தரப்பு வன்முறையில் இறங்கி, நினைத்தபடி தேர்தலை தள்ளிப்போட வைத்துவிட்டது. வன்முறைக் கும்பலின் நோக்கம், நரிக்குடி யூனியன் அலுவலகத்துக்குள் புகுந்து ஒரு உறுப்பினரையாவது தாக்கிவிட்டால் போதும் என்பதுதான். உறுப்பினர்கள் எண்ணிக்கையில் சமபலம் என்பதை உடைப்பதற்காகவே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.
தற்போது, 4 பேர் கொண்ட கும்பலில் இருவர் வளைக்கப்பட்டு கைதாகியுள்ளனர். இதே விருதுநகர் மாவட்டத்தில், சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய ஒன்றியங்களில், தேர்வான உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், இந்த இரு ஒன்றியங்களின் தலைவர்களாக திமுக தரப்பில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலையில், அராஜகம் அரங்கேறி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஒன்றியத்தைக் கைப்பற்றி தலைவர் நாற்காலியில் தங்கள் கட்சியினரை உட்கார வைப்பதற்காக, கும்பல் கும்பலாக கட்சியினரை அனுப்பி, வன்முறையில் ஈடுபட வைத்து, தேர்தலை தள்ளிவைக்கச் செய்தது கொடுமை அல்லவா? தேர்தல் ஆணையம், விதிமுறைகளைக் கடைப்பிடித்து தேர்தலை நடத்துகிறோம் எனச் சொல்வது, தமிழகத்தில் கேலிக்குரியதாகிவிட்டது.