தமிழக அரசின் பொங்கல் பரிசுத் திட்டத்தை சிவகாசியில் துவக்கி வைத்த அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
“உள்ளாட்சி தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் பலப்பரீட்சையாக இருந்தது. திமுகவினர், வெற்றி பெற வேண்டும் என்ற உணர்வோடு வெறித்தனமாக வேலை பார்த்தார்கள். அதிமுகவினரோ, வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தனர். அதனால்தான் பல இடங்களில் வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க, முதல்வர், துணை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவர்களின் ஆலோசனையைப் பெற்று, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.
குடியுரிமைச் சட்டத்தினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ராமநாதபுரத்தில் உள்ள பிரச்சனையை அன்வர்ராஜா சொல்கிறார். அதிமுகவுக்கு வாக்களிக்கக்கூடிய இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் எப்பொழுதும் அதிமுகவுக்கே வாக்களிப்பார்கள்.
பொன் ராதாகிருஷ்ணனின் கருத்தும் என்னுடைய கருத்தும் ஒன்றுதான். பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டிருக்க வேண்டும். திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால்தான், ஒவ்வொரு கட்சியின் பலமும் என்னவென்று தெரியும். 25 கட்சிகளை கூட்டணியில் சேர்த்துக்கொண்டு திமுக போட்டியிடுவது கேவலமாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிமுக தனித்து நின்றுதான் இத்தனை இடங்களில் வென்றுள்ளது.
நகராட்சி, மாநகராட்சி தேர்தல் கண்டிப்பாக நடைபெறும். அதற்கு அதிமுக தயாராகி வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் யாருடைய தோல்விக்கும் யாரும் காரணமல்ல. அமமுக பெற்ற வாக்குகளினால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. தேர்தல் மிகவும் நேர்மையாக நடந்திருக்கிறது. ஒரு சதவீதம் கூட முறைகேடு நடக்கவில்லை. யாருடைய வெற்றியிலும் யாரும் தலையிடவில்லை. அப்படி அதிமுக தலையிட்டிருந்தால், திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற்றிருக்க முடியாது. உள்ளாட்சி வேட்பாளர்கள் கம்மல், மூக்குத்தி, தாலியையெல்லாம் அடகு வைத்துத்தான் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெற்றவரைத் தோற்றுவிட்டார் என்று அறிவிப்பது எத்தனை கேவலமானது. இதுபோன்ற ஈனத்தனமான செயலில், என்னைப் போன்றவர்கள் ஒருக்காலும் ஈடுபட மாட்டோம்.
நடந்த தேர்தலில், நாங்கள் சொல்லிச் சொல்லி எதிர்க்கட்சியினரை உசுப்பிவிட்டது போல் ஆகிவிட்டது. இனிமேல் எதுவும் சொல்லப்போவதில்லை. இனி அடிதான்! நாங்கள் வேகமாக ஓடுவோம் என்பது தெரிந்து, எங்கள் கட்சியினர் எல்லையில் போய் உட்கார்ந்து விடுகிறார்கள். இவர்கள் உட்கார்ந்ததும், பின்னாலேயே வரும் எதிர்க்கட்சியினர் படக்கென்று முந்திவிடுகிறார்கள். இனிமேல் எதுவும் சொல்லாமல் ரகசியக் கூட்டம் நடத்தியே, திட்டம் போட்டு வேலை பார்த்து நகராட்சிகள் அத்தனையையும் கைப்பற்றி விடுவோம்.” என்றார்.
ரகசியக் கூட்டம் நடத்தி திட்டம்(?) தீட்டப்போவது குறித்தெல்லாம், பேட்டியிலேயே அமைச்சர் பகிரங்கமாக வெளிப்படுத்துவதை என்னவென்று சொல்வது?