சேலம், பெரம்பலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை ஒட்டி நீண்டு கிடக்கிறது வனத்துறைக்குச் சொந்தமான காப்புக்காடுகள். இந்த காட்டில் மான்கள், மயில்கள், முயல்கள் காட்டுப் பன்றிகள், எறும்பு திண்ணிகள், உடும்புகள் என ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. இந்த நிலையில் விருத்தாசலம் வனச்சரக அலுவலர் ரகுவரன் தலைமையில் வனவர்கள் பன்னீர்செல்வம், சிவக்குமார், வனக்காப்பாள்கள் ஆறுமுகம், நவநீதகிருஷ்ணன், ஜெயவர்தன் ஆகியோர் வேப்பூர் பகுதியில் உள்ள கிருஷ்ணாபுரம் வனக்காட்டில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது காட்டுக்குள் ஒரு இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வந்தனர். சந்தேகத்திற்கிடமான முறையில் காட்டுக்குள் திரிந்த அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய வனத்துறையினர் முயன்றனர். அதற்குள் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரில் இருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து மான் ஒன்றை கீழே போட்டுவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தனர். அவர்களை துரத்திச் சென்றதில் ஒருவர் மட்டும் வனத்துறையினர் கையில் சிக்கினார். அவரிடம் நடத்திய விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் இறையூர் கிராமத்தைச் சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் மகன் யாக்கோப் (வயது 29) என்பது தெரியவந்தது. தப்பிச் சென்ற இருவரும் அதே இறையூர் கிராமத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜ், மொட்டையன் என்பது தெரிய வந்தது.
யாக்கோபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மான் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த நிலையில் இருந்தது. அவர் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியில் மேலும் இரண்டு குண்டுகள் இருந்தன. இதையடுத்து வேட்டைக்காக அவர்கள் பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, இருசக்கர வாகனம் ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், வனத்துறையினர் பிடிபட்ட யாக்கோப்பிடம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு தப்பிச் சென்ற இருவரையும் தேடி வருகின்றனர்.