விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் நேற்று (12.02.2021) ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு அறைகள் தரைமட்டமான நிலையில் உயிரிழப்பு என்பது 19 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் மட்டுமில்லாது தேசிய அளவிலான தலைவர்களும் இந்த சம்பவத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். வெடிவிபத்தில் 30க்கும் அதிகமானோருக்குப் பலத்த காயமும், பலருக்கு 80% தீக்காயமும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் திருமண நிச்சயம் செய்யப்பட்ட இளம்பெண், 7 மாத கர்ப்பிணி பெண் உட்பட 19 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 2 பேரின் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் உயிரிழப்பு என்பது அதிகரிக்கக்கூடும் என அச்சம் நிலவி வருகிறது.
சாத்தூர் அச்சங்குளம் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக மொத்தம் 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறியது, கவனக்குறைவாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, கவனக்குறைவாக செயல்பட்டு காயம் ஏற்படுத்தியது, அளவுக்கு அதிகமான ரசாயனம் மூலப்பொருட்களைப் பயன்படுத்தியது உட்பட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெருமாள் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் உடலானது சாத்தூர் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று 9.30 மணிக்கு மேலாக உடலானது பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, இந்த விபத்தில் சிக்கிய 29 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.