நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
நேற்று திமுக, அதிமுக, பாஜகவினர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த இடங்களில் மோதிக்கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்நிலையில், நேற்று நீலகிரியில் அதிமுக வேட்பாளர்களும் பாஜக வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் நடத்தை வழி முறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் நேற்று பாஜக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். அப்போது தேர்தல் நடைமுறையை மீறி பெருங்கூட்டத்துடன் வந்ததால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறைக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தேர்தல் நடத்தை வழிமுறைகளையும் மீறி பட்டாசு வெடித்தது; அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர்த்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்தியது; காவல்துறையினரைப் பணி செய்ய விடாமல் தடுத்து சாலை மறியலில் ஈடுபட்டது தொடர்பாக பாஜக மற்றும் அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.