விநாயகர் சதுர்த்தி மற்றும் பர்யூசன் பண்டிகையை முன்னிட்டு, இறைச்சி மற்றும் மதுபானக் கடைகளை 10 நாட்கள் மூடக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, மதுரை வட இந்தியர் நலச் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையும், ஜெயின் பண்டிகையான பர்யூஷன் பண்டிகையும், அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளன. இந்தப் பண்டிகைகளை முன்னிட்டு, தமிழகத்தில் 10 நாட்களுக்கு அனைத்து இறைச்சிக் கடைகள், இறைச்சிக் கூடங்கள் மற்றும் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும். இதுசம்பந்தமாக, தமிழக அரசிடம் அளித்த கோரிக்கை மனு மீது, இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, அவசர வழக்காக, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மதுபானக் கடைகளை மூடுவது என்பது அரசின் கொள்கை முடிவாகும். இறைச்சிக் கடைகளை மூடுவது தொடர்பாக அரசின் விளக்கத்தைப் பெற்று தெரிவிப்பதாகக் கூறி, அவகாசம் கோரினார்.
இதையடுத்து, மனுதாரர் கொடுத்த இரு மனுக்கள் மீது எடுத்த முடிவுகளோடு, ஆகஸ்ட் 18-ம் தேதிக்குள பதில் மனுத்தாக்கல் செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.