![vilupuram school girl](http://image.nakkheeran.in/cdn/farfuture/9ZrqAMyG-4QVq39WUAoa2i3H2TVRNj-G6GJPyfyKGp0/1604143836/sites/default/files/inline-images/vizhupuram-in_21.jpg)
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மகள் 16 வயது சினேகா, அங்குள்ள பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர்கள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி சினேகா மயங்கிக் கிடந்துள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். மாணவியின் திடீர் மரணம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்த மாணவியின் உடல், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து மாணவியின் தந்தை கலியமூர்த்தி, திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமி கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா அல்லது அவரது மரணத்தில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி மயங்கி விழுந்து மருத்துவமனையில் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.