![villupuram](http://image.nakkheeran.in/cdn/farfuture/T2wtG1ssI4-_ozNjZBUpJXB2uEyRSXQ3_f4-dkeGgJ4/1596708577/sites/default/files/inline-images/villupuram%20600.jpg)
விழுப்புரம் மாவட்டம், திருநந்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 75 வயது ராஜேந்திரன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவர் நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு, கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்தவர் அதை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். போலீசார் அவரது தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் அவர், ஆட்சியர் அண்ணாதுரை அவர்களிடம் அளித்த புகார் மனுவில், எனது பாட்டிக்கு சொந்தமாக நிலம் மற்றும் வீட்டு மனை ஆகியவற்றை 1969ல் என் பெயருக்கு தான செட்டில்மெண்ட் எழுதி வைத்தார். அதில் வீடு கட்டி வசித்து வந்தேன். இரண்டு வருடத்திற்கு முன்பு என் வீடு தீப்பிடித்து எரிந்து விட்டது. இப்போது அந்த இடம் காலி மனையாக உள்ளது. இந்த காலி மனையை எங்கள் ஊரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அந்த காலி மனையைஅவரது தந்தை பெயரில் போலி ஆவணம் தயார் செய்து பட்டா மாற்றம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே உரிய ஆவணங்களுடன் புகார் மனு அளித்தேன். அந்த மனு மீது கோட்டாட்சியர் விசாரணை செய்து எனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு உத்தரவிட்டார்கள். ஆனால் எனது நிலத்தை போலி ஆவணம் மூலம் பட்டா மாற்றம் செய்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலரின் உறவினர்கள் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் பணியாற்றுகின்றனர்.
மேலும் அவர் ஆளும் கட்சியில் இருப்பதாலும் கோட்டாட்சியர் உத்தரவிட்டும் என் பெயருக்கு பட்டா மாற்றி கொடுக்காமல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகம் என்னை பல மாதங்களாக ஏமாற்றி வருகின்றனர். எனவே இதுகுறித்து மேல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் இறந்து போனால் மேற்படி நபர்கள் தான் காரணம் எனவே கோட்டாட்சியர் உத்தரவுப்படி என் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தரவும் என் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியிருந்தார் மாற்றுத்திறனாளி ராஜேந்திரன். மனுவை விசாரித்த ஆட்சியர் அண்ணாதுரை, ராஜேந்திரன் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அப்போது உத்தரவிட்டுள்ளார்.