விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே உள்ள காப்பியம் புலியூர் ஏரிக்கரை பகுதியில் ஒரு பள்ளி மாணவியும், மாணவனும் கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தனிமையில் பேசிக் கொண்டிருந்தபோது அவர்களை நோட்டமிட்டு பின் தொடர்ந்து சென்ற மூன்று வாலிபர்கள், மாணவியுடன் தனிமையில் பேசிக்கொண்டிருந்த மாணவனை கத்தியால் குத்தி விட்டு அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மாணவியின் வெள்ளி கொலுசு மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்ததோடு மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். அப்போது மாணவி கூச்சலிட மூவரும் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞர்களை பிடிப்பதற்காக, விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். மாணவி இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் பற்றி அளித்த அடையாளங்களின் அடிப்படையிலும், அப்பகுதியில் சம்பவத்தன்று செயல்பட்ட செல்போன் சிக்னலை வைத்தும் தீவிர விசாரணை செய்து வந்தனர். மேலும் மாணவியிடம் இருந்து பறித்துச் சென்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது இயங்கி வந்துள்ளது. அந்த மொபைல் போன் சிக்னலை வைத்து கோலியனூர் அடுத்த குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த குடியரசு (வயது 23), அபி என்கிற அபினேஷ் (வயது 23), அன்பு (வயது 22) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.
போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மூவரும் மாணவனை கத்தியால் குத்தியது மற்றும் மாணவியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததும் தாங்கள் தான் என்பதை ஒத்துக்கொண்டனர். அவர்கள் பயன்படுத்திய பைக், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய தீவிர விசாரணையில் விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள காதலர்கள் தனிமையில் சந்திக்கும் இடங்களை நோட்டமிட்டு அவர்களைப் பின்தொடர்ந்து சென்று மிரட்டுவது அவர்களிடம் இருக்கும் பணத்தை பறிப்பது பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது மற்றும் வழிப்பறி கொள்ளை செய்வது என பல்வேறு குற்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வந்தது இதை எடுத்து இவர்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.