Skip to main content

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொலை! -சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கு!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020

 

Villupuram girl Jayasree issue

 

விழுப்புரம் சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய் நல்லூர் அருகேயுள்ள சிறுமதுரை கிராமத்தை சேர்த்தவர் ஜெயபால். ஜெயபாலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக,  அவர் வீட்டில் இல்லாத நேரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகள் ஜெயஸ்ரீயை அப்பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் ஆகியோர் தீ வைத்து எரித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், முருகன், கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், அதிமுக கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டனர். தமிழக அரசு சிறுமியின் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளது.

 

 


இந்நிலையில், கைதான இருவரும் ஆளும்கட்சியான அதிமுகவை சேர்ந்தவர்களாக உள்ளதால், தமிழக காவல்துறை விசாரித்தால் இந்த வழக்கில் நியாயம் கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிடவேண்டும் என்றும், சென்னை ஆவடியை சேர்ந்த சுமதி என்பவர் அரசுக்கு மனு அனுப்பியுள்ளார். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காததால், பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்