Skip to main content

“மனு அளித்தால் மட்டும் பட்டா மாற்றம் செய்து தர முடியாது” - வி.ஏ.ஓ.வை அதிரடியாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத் துறை

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

villupuram district vao action taken by police

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் அசோக் குமார் (வயது 29). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்குச் சொந்தமான பூர்வீக வீட்டுமனையை அளவீடு செய்து பட்டா மாற்றம் செய்யக்கோரி ஒலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனுக்கு உரிய ஆவணங்களுடன் மனு செய்துள்ளார். இதன் பிறகு கருணாகரனை நேரில் சந்தித்து பட்டா மாற்றம் செய்து தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அசோக் குமார் கேட்டுள்ளார். அதற்கு கிராம நிர்வாக அலுவலரான கருணாகரன், "வெறும் மனு அளித்தால் மட்டும் பட்டா மாற்றம் செய்து தர முடியாது. உங்கள் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருவதற்கு 5000 ரூபாய் லஞ்சமாகக் கொடுத்தால் தான் பெயர் மாற்றம் செய்து தர முடியும்" என்று கூறியுள்ளார்.

 

தங்களுக்குச் சொந்தமான பூர்வீக வீட்டுமனையை உரிய ஆவணங்கள் அடிப்படையில் பட்டா மாற்றம் செய்வதற்கு எதற்காக லட்சம் கொடுக்க வேண்டும் என்று வேதனை அடைந்த அசோக் குமார், இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நேற்று அசோக் குமாரிடம் ரசாயனம் தடவிய 5000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் கொடுக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அசோக் குமார் நேற்று ஒலக்கூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் கருணாகரனிடம் 5000 ரூபாய் லஞ்சப் பணத்தை கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் பாலசுந்தர் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திலேயே கருணாகரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

 

லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரால் கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் லஞ்சம் வாங்கும் போதே கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வருவாய்த் துறையினர் மத்திலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்