விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஆனத்தூர் கிராமம். ஊர் காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் முத்துராமன். வயது 30. கூலித் தொழிலாளியான இவர் பிரதமர் வீடு கட்டும் திட்டத்திற்கு தமக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை திருமுண்டீச்சரம் கிராமத்தைச் சேர்ந்த ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திரபோஸ் என்பவரிடம் ஒப்பந்த அடிப்படையில் வீடு கட்டித் தருமாறு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒப்படைத்துள்ளார். அதற்காக முதல் தவணை பணம் கொடுத்துள்ளார்.
அதன்படி வீடு கட்டும் பணி துவங்கி அடித்தளப்பணியோடு நிறுத்திவிட்டு முத்துராமனிடம் சுபாஷ் சந்திரபோஸ் இரண்டாவது தவணையாக பணம் கேட்டுள்ளார். இதனால் சுபாஷ் சந்திர போசுக்கும் முத்துராமனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு ஆனத்தூர் பகுதியில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருவெண்ணைநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலுவிடம் ஒப்பந்தக்காரர் சுபாஷ் சந்திர போஸ் சென்று முறையிட்டுள்ளார்.
அது விஷயமாக சப் இன்ஸ்பெக்டர் ஒரு போலீஸ்காரரை அழைத்துக்கொண்டு முத்துராமனிடம் விசாரணை செய்துள்ளார். அப்போது முத்துராமன் சப் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீஸ்காரர் இருவரையும் தாக்கியதாகவும் அதில் அவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டதோடு இரண்டு பற்களும் உடைந்தனவாம். இதனால் அவர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த தகவல் அறிந்த திருக்கோவிலூர் கோட்டாட்சியர் ராஜேந்திரன், டிஎஸ்பி நல்லசிவம், தாசில்தார் வேல்முருகன், பிடிஓ முபாரக் அலி, திருவெண்ணைநல்லூர் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் அப்பகுதி மக்களை சந்தித்து விசாரணை செய்துள்ளனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக சமாதானம் கூறினர். இருந்தும் அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.