விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகில் உள்ள மேல்எடையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாபர். இவருக்கு சொந்தமான குட்டை கிணற்றில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் இறந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் செஞ்சி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த குழந்தை மற்றும் பெண்ணின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல்லாவுக்கும், செஞ்சி அருகே உள்ள தோப்பு கிராமத்தைச் சேர்ந்த ஃபிர்தோஸ் என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ள நிலையில், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது தாய் வீட்டுக்கு ஃபிர்தோஸ் கைக்குழந்தையுடன் வந்துள்ளார். தனது தாய், தந்தையிடம் கணவருக்கும் தனக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறித்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை அவரது கணவருடன் நீண்ட நேரம் செல்போனில் ஃபிர்தோஸ் பேசியதாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு பெற்றோருக்கு தெரியாமல் சென்று கைக்குழந்தையுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். ஃபிர்தோஸ்க்கும் அப்துல்லாவுக்கும் திருமணமாகி ஐந்து வருடங்களுக்குள் அவர் இறந்துள்ளதால் இது குறித்து கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
இரண்டு மாத கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.