விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகில் உள்ள ஒதயத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மனைவி டெய்சி(வயது 27), தாய் மேரி, தங்கை ஜோவிதா, தம்பி டோனி, சித்தி இயேசுராணி, மகன்கள் டேனிஷ், ஆல்வின். இவர்கள் ஏழு பேரும் நேற்று விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளனர். நுழைவு வாயிலில் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
அப்போது டெய்சி போலீசாரிடம், “எங்கள் கிராமத்தில் சத்துணவு பொறுப்பாளராக வேலை பார்த்து வருபவர் எமிலி மேரி. இவர் எனக்கு சத்துணவு பொறுப்பாளர் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் இருந்த நான்கு சவரன் நகையை வாங்கிக் கொண்டார். வேலையும் வாங்கித் தரவில்லை; எனது நகையையும் திருப்பித் தரவில்லை. கடந்த டிசம்பர் மாதம் குடும்பத்தினருடன் சென்று எமிலி மேரியிடம் வேலை வாங்கிக் கொடு அல்லது எனது நகையைத் திருப்பிக் கொடு என்று கேட்டோம். அப்போது அவரும் அவரது ஆதரவாளர்களும் எங்களைத் திட்டியதோடு எங்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். முகத்தில் மிளகாய் பொடி தூவி என் கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி செயினையும் பறித்துக் கொண்டனர்.
இது குறித்து கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். ஆனால், போலீசார் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல நாள் காவல் நிலையத்திற்கு நடையாய் நடந்தும் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை. எனவே, எமிலி மேரி மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், எனது நகையைத் திருப்பித் தராததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் அலுவலகம் எதிரே குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம்” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் அவர்களது புகாரினை உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதோடு தற்கொலை முயற்சி செய்த அவர்கள் மீதும் போலீசார் தற்கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்.