விழுப்புரம் மாவட்டம், பாம்பன் தாங்கல் கிராமத்தின் அருகே செல்லும் சாலையோரம் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள பாம்பன் தாங்கல் கிராமத்தின் அருகே செல்லும் சாலையோரம் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் வளத்தி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதனையடுத்து வளத்தி காவல் ஆய்வாளர் கலைச்செல்வி, உதவி ஆய்வாளர்கள் கார்த்தி, சீதாபதி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் உடலின் அருகே மற்றொருவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொல்லப்பட்ட ஆணின் உடலையும் தலையையும் காவலர்கள், உடற்கூராய்விற்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவலர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்தவர், அருள் நாடு கிராமத்தைச் சேர்ந்த தேவஇறக்கம் என்பவரது மகன் ‘பால் ஞானதாசன்’ (40) என்பதும் அவரது உடல் அருகே படுகாயத்துடன் மீட்கப்பட்டவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ஜான் சத்தியசீலன் (46) என்பதும் தெரிய வந்துள்ளது.
இவர்கள் இருவரும் நேற்று காலை பாப்பன் தாங்கல் கிராமத்தை சேர்ந்த சக்கரவர்த்தி என்பவரது விவசாய நிலத்திற்கு வேலைக்கு செல்வதாக தங்கள் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். வேலை முடிந்து மாலையில் வீட்டுக்குத் திரும்பும்போது இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில், நெல் அறுக்கும் இயந்திரத்தில் உள்ள பிளேடால் கழுத்து அறுபட விபத்தை ஏற்படுத்திவிட்டு, விபத்து ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்றது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காயம்பட்ட சத்தியசீலன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.