விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது தடுத்தாட்கொண்டூர். இந்த ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சுவிதா. இவர் மீது ஊராட்சி மன்ற பணிகளில் பல்வேறு ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனிக்கு பல்வேறு புகார் சென்றுள்ளது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்தினார் மாவட்ட ஆட்சியர். ஊராட்சிப் பணிகளை நேர்மையான முறையில் செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால், மாவட்ட ஆட்சியரின் அறிவுரையை புறந்தள்ளிவிட்டு, தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை சரிவர செய்யாமல் பல்வேறு பணிகளை முடக்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் தரப்பில் மீண்டும் மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் தடுத்தாட்கொண்டூர் கிராமத்தில் நடைபெறும் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு அடிப்படை பணிகளை நிறைவேற்றும் பொருட்டும், பொதுமக்கள் நலன் கருதியும் தமிழ்நாடு ஊராட்சிகளில் சட்டம் 1994 பிரிவு 203 ன் படி கிராம ஊராட்சி மன்ற தலைவர் சுவிதா கிராம பணிகளில் நடைபெறும் செலவினங்களுக்காக செக்கில் கையெழுத்திடும் பவரை மாவட்ட ஆட்சியர் பழனி முடக்கி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியரின் இந்த உத்தரவை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் மூலம் ஊராட்சி மன்ற தலைவருக்கு உத்தரவு நகல் வழங்க சென்றனர். ஆனால் அந்த உத்தரவை தலைவர் சுவிதா வாங்க மறுத்துள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை வருவாய் துறை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர்கள் நேரில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் வீட்டின் முன்புற சுவரில் ஒட்டி உள்ளனர். ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற முறைகேட்டுக்கு துணையாக இருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.