விழுப்புரம் மாவட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணறு ஒன்றில் மனித கழிவு மிதப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மாவட்ட ஆட்சியர் பழனி, இது முற்றிலும் தவறான தகவல் என விளக்கமளித்துள்ளார்.
அதில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழுவினரை அனுப்பி சம்மந்தப்பட்ட குடிதண்ணீர் கிணற்றைப் பார்வையிட்டனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் கிணற்றில் உள்ள நீரை எடுத்து பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிணற்றில் மிதந்த பொருள் ஒரு தேன் அடை என்பதும் கண்டறியப்பட்டது. பின்பு கிராம மக்கள் முன்னிலையில் கிணற்றுக்குள் இருந்து தேன் அடை எடுக்கப்பட்டது. இதையடுத்து பாதுகாப்பிற்காக கிணற்றின் மீது இரும்பு கம்பி வேலி அமைக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.