விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே ஆவுடையார்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் குமரன். இவரது மகள் கயல்விழி (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்துள்ளார். சரியான முறையில் படிக்காமல் கயல்விழி விளையாட்டுத்தனமாக இருந்து வந்தது குறித்து அவரது தாயார் கண்டித்துள்ளார். தாய் கண்டித்ததால் கோபமடைந்த கயல்விழி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் மாணவி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி, மாணவியின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்து பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவரது உறவினர்கள், ஊர் மக்கள் உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக ப்ரீசர் என்னும் சவப்பெட்டியில் வைத்துள்ளனர். அப்போது மாணவியின் உடலைப் பார்த்து கதறிய பெண்கள் சிலர் சவப்பெட்டியின் மீது கையை வைத்துள்ளனர். திடீரென அந்தப் பெட்டியிலிருந்து மின் கசிவு ஏற்பட்டு பெட்டி மீது கை வைத்து அழுது கொண்டிருந்த 9 பெண்கள் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டனர். அங்கு கூடியிருந்தவர்கள் இதைக் கண்டு அதிர்ச்சியும் அடைந்தனர்.
உடனடியாக சவப்பெட்டிக்கு செல்லும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின்சாரத் தாக்குதலுக்கு ஆளான பெண்களை விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து விக்கிரவாண்டி காவல் ஆய்வாளர் விநாயக முருகன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க வீட்டில் அழுது கொண்டிருந்த பெண்கள் மீது திடீரென மின்சாரம் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.