தூத்துக்குடியில் வடிவேலு பட நகைச்சுவை போல் ஒரு கிராமமே கிணற்றைக் காணவில்லை என மாவட்ட நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளது.
தூத்துக்குடி வேர்வைக்காரன்மடம் கிராமத்தில் கிறிஸ்தவ மற்றும் இந்து வழிபாட்டுத் தலங்கள் அருகருகே அமைந்துள்ளன. தேவாலயம் அருகே அரசின் புறம்போக்கு நிலத்தில் பொதுக்கிணறு இருந்தது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் கிணற்றை மூடி அதன் மேல் தேவாலயத்திற்கான கட்டடம் கட்டும் பணி நடைபெற்றது. ஏற்கனவே இதுகுறித்து கிராம மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை அணுகி அங்கு கிணறு இருந்த இடம் குறித்து விளக்கம் கேட்டதற்கு, அங்கு நூலகம் வருவதாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். ஆனால், தற்போது தேவாலயத்திற்கான கட்டடம் வரும் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தங்கள் ஊரிலிருந்த கிணற்றைக் காணவில்லை என வேர்வைக்காரன்மடம் கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். அந்த இடத்தில் நூலகம் கட்டித் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கிராமத்தினர், "எங்க ஊர்ல கெணத்த காணோம். எங்க தான் களவாண்டுட்டு போனாங்கன்னு தெரியல" எனக் கூறினர்.