விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் மேல்தணியாலம்பட்டு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 280 ஓட்டுக்களைச் சேமங்கலம் ஊராட்சியில் இணைத்தும் கீழ்தணியாலம்பட்டு என்ற பெயரில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கி ஓட்டுரிமை வழங்கப்படுகின்றது.
கடந்த பல ஆண்டுகளாக இந்த கிராம மக்கள் ஓட்டு உரிமையை தங்களின் கிராமமான மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் சேர்க்க வேண்டும் எனப் போராடி வருகின்றனர். ரேஷன் பொருள், கோவில், குளம், சுடுகாடு, பள்ளிக்கூடம், அங்கன்வாடி என அனைத்து துறையிலும் மேல்தணியாலம்பட்டு என ஒன்றுபட்டு இணைந்திருக்கும் நிலையில் வாக்களிக்க மட்டும் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சேமங்கலம் செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது.
இதனால் பல இன்னல்களும் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இந்நிலையில் நேற்று (14ஆம் தேதி) வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சேர்த்தல் சிறப்பு முகாமில் சேமங்கலம் ஊராட்சியில் இருந்து வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்துவிட்டு மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் பெயர் சேர்க்க வந்த போது வருவாய்த் துறையினர் சேர்க்க முடியாது எனக் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு அதிகாரிகளின் பேச்சுவார்த்தையில் அங்கிருந்து மக்கள் சென்றனர்.