கடலூர் மாவட்டம் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ளது ஆவினங்குடி. இங்கிருந்து வடக்கே சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது சாத்தநத்தம், நாவலூர். இந்த இரு ஊர்களுக்கும் இடையே வெலிங்டன் ஏரியிலிருந்து உபரி நீர் திறந்துவிடப்படும் தண்ணீரோடு மழை நீரும் சேர்ந்து பெரிய ஓடையாக விரிவடைந்து சென்று மணிமுத்தாற்றில் கலக்கிறது. மேற்படி சாத்தநத்தம் - நாவலூர் ஆகிய இரு ஊர்களுக்கும் இடையில் ஓடையின் குறுக்கே ஒரு தரைப்பாலம் உள்ளது. அந்த தரைப் பாலமும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
மழைக் காலங்களில் இந்த இரு ஊர் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு ஊர்களுக்கும் செல்பவர்கள் ஓடையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தைக் கடந்து செல்ல முடியாமல் சுமார் 40 ஆண்டுகளாக மிகுந்த சிரமப்படுகிறார்கள். இதனால் மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் செல்லும்போது போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும். இந்நிலையில், இந்த ஓடையின் குறுக்கே மேம்பாலம் அமைக்கக் கோரி சுமார் 40 ஆண்டுகளாகப் பல்வேறு மனுக்களை உயரதிகாரிகளுக்கு அனுப்பியும், போராட்டங்களை நடத்தியும்வருகிறார்கள் இப்பகுதி மக்கள். இந்நிலையில், தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஓடையில் ஓடும் வெள்ள நீரில் குறுக்கே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி தண்ணீரில் இறங்கி காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தகவலறிந்த மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தண்டபாணி, சண்முக சிகாமணி, திட்டக்குடி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி, ஆவினங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அவர்களது கோரிக்கைகள் குறித்து உயரதிகாரிகளிடம் தெரிவித்து விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர். போர்க்கால அடிப்படையில் சாத்தநத்தம் - நாவலூர் இடையே மேம்பாலம் கட்ட வேண்டியது அவசியமானது, அவசரமானது என்கிறார்கள் அப்பகுதி கிராம மக்கள்.