கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அம்மேரி பகுதியில் புதியதாக அரசு மதுபானக்கடை திறக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் மதுபானக்கடை திறந்தால் பள்ளி மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைத்து தரப்பினரும் மிகவும் பாதிக்கப்படுவர் எனக்கூறி அரசு மதுபான கடை அமைக்ககூடாது என்று பல கட்டப் போராட்டங்கள் நடத்தியதுடன், மாவட்ட நிர்வாகத்திடம் மனுக்களும் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதுபானக் கடை ரகசியமாக திறக்கப்பட்டு குடிமகன்களுக்கு இலவசமாக மது பாட்டில்கள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மதுக்கடை வேண்டாம் எனக்கூறி போராடும் மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்தி மதுக்கடையை திறக்கலாம் என்னும் பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுபோன்று இலவசமாக குடிகாரர்களுக்கு மதுப்புட்டிகளை கொடுத்து போராடும் மக்களுக்கு எதிராக திருப்புவதற்கு இதுபோன்று செய்கிறார்கள் என கிராம பெண்கள் புகார் கூறுகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மதுபானக்கடை முன்பு நின்று பெண்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் தமிழக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அப்பகுதியில் மதுபானகடை திறக்க மாட்டார்கள் என்று உத்தரவாதம் அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.