தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கிறது. இருப்பினும் கோயில்கள், மால்கள் உள்ளிட்டவைகளை மத்திய அரசின் நெறிமுறைகளைப் பின்பற்றி திறக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும் இது தொடர்பான இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகள் எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கோயில்களைத் திறக்க அனுமதி அளித்துள்ளனர். ஆனால் தமிழக அரசு இன்று வரை கோயில் திறப்புத் தொடர்பான அறிவிப்புகளை வெளியிடவில்லை.
இருப்பினும் போக்குவரத்துச் சேவை உள்பட பல்வேறு தளர்வுகளைத் தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் கோயில்களைத் திறக்க இந்து முன்னணி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களில் முன்பாக இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகரில் உள்ள அபிராமி அம்மன் கோவில் முன்பாக இந்து முன்னணியைச் சேர்ந்த சங்கர் உள்பட பொறுப்பாளர்கள் சிலர் கோயிலைத் திறக்கக்கோரி ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டம் நடத்தினார்கள். அதேபோல் பழனி முருகன் கோயில் உள்பட பழனியைச் சுற்றியுள்ள பாலசமுத்திரம், ஆயக்குடி உள்பட 44 கோயில்களில் முன்பு குவிந்த இந்து முன்னணியினர் ஒற்றைக்காலில் நின்று நூதனப் போராட்டம் நடத்தினர். மேலும் வத்தலகுண்டு முத்துமாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், பஸ் நிலையம் விநாயகர் கோயில், கொடைரோடு முருகன் கோவில், அம்மையநாயக்கனூர் கதர் நரசிம்மப் பெருமாள் கோயில், பள்ளப்பட்டி விநாயகர் கோயில், உள்பட நகர் பகுதியில் உள்ள பல்வேறு கோயில்களிலும் போராட்டம் நடைபெற்றது.