Skip to main content

45 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்; சிட்டிசன் பட பாணியில் சிக்கித் தவிக்கும் கிராமம்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாலையும் மாணவர்கள் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் போதும் தங்களின் குழந்தை வீடு திரும்புவார்களா? என்ற அச்சத்தில் வாழ்வதை விட, தன் குழந்தை உயிருடன் இருந்தால் போதும் எனப் பள்ளிக்கு அனுப்பத் தயங்கும் பெற்றோரால் வருங்கால தலைமுறையினரின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. 

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்டது போகிபுரம் கிராமம். சூளகிரி - சின்னாறு அணையைக் கட்ட காமநாயக்கன்பேட்டை, ஒண்டியூர், போகிபுரம் ஆகிய கிராம மக்கள் 45 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியேற்றப்பட்டு காமராஜர் காலத்தில் அணை கட்டப்பட்டது. இந்த சூழ்நிலையில் அணைக்கு மத்தியில் போகிபுரம் என்கிற கிராமத்தின் ஒரு பகுதி வெளியேற்றப்படாமல் அங்கேயே இருந்துகொள்ள அரசு அனுமதித்திருந்தது. சிறு குடும்பங்களாக இருந்தவர்கள் தற்போது 100 குடும்பங்களாக வளர்ந்துள்ளனர். ஆனால் வாக்குரிமை, ரேசன் கார்டு என இந்திய குடிமகனுக்கான அனைத்து உரிமமும் இருந்தும் ஒற்றைப் பாதை இல்லாமல் எந்த  அடிப்படை வசதிகளும் பெற முடியாமல் சொந்த மண்ணுக்குள்ளே அகதிகளாக வாடுகிறார்கள். 

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

போகிபுரம், ஆற்றைக் கடக்கும் கிராமம் என்பதால் அங்கன்வாடி, நியாயவிலைக்கடை, தொடக்கப்பள்ளி, மருத்துவமனை, மளிகை பொருட்கள் என அனைத்திற்கும் இந்த மக்கள் 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சூளகிரிக்குத்தான் செல்ல வேண்டும். அதற்கான பாதை சின்னாறு அணையைக் கடந்து செல்வதே ஒரே வழியாக உள்ளது.  ஓர் ஆண்டிற்கு 10 மாதங்கள் அணையில் நீர் இருக்கும் என்பதால், 400 மீட்டர் தூரத்தை பரிசலில் கடந்தால் தான் கரையைக் கடக்க முடியும். அதுவும் 15 அடி ஆழ நீரில் ஆபத்தான பரிசல் பயணம் தான் வேறு வழியே கிடையாது. ஆகையால் பள்ளிக்குச் செல்லக்கூடிய மாணவர்களின் நிலை கேள்விக்குறியாகவே உள்ளது.

 

அது மட்டும் இல்லாமல் கர்ப்பிணி பெண்கள் உடல்நலக் குறைபாடு நேரங்களில் அவசரமாக செல்ல முடியாத சூழலில் பலரிடமும் முறையிட்டும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போகிபுரம் கிராமத்திற்குச் செல்ல மேம்பாலம் அமைக்கத் தொடங்கிய பணிகள் 30% அளவிலேயே நின்றுவிட்டன. அணையில் நீர் அதிகமாக உள்ளதென்பதால் பணிகளைத் தொடர முடியாதென பொதுப்பணித் துறையினர் கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது . 

 

Villagers in Krishnagiri have been suffering without roads for 45 years

 

இது குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டபோது, இல்லம் தேடிக் கல்வி வந்த நிலையிலும், இந்த கிராம மக்களின் இல்லங்களுக்குச் செல்ல சாலைகளை எதிர்பார்த்துள்ள நிலைதான் உள்ளது. 1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப அனைவரும் அச்சத்தாலேயே அனுப்பாமலும் சிலர் வேறு வழியில்லாமல் பரிசலின் இருபுறமும் கயிற்றால் கட்டப்பட்டு கயிற்றை இழுத்தவாறே கிராம மாணவர்கள் பயணித்து வருகிறார்கள். இந்த பரிசல் கூட அரசு வழங்கவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மையாக உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார்கள்.

 

ஆகையால் கைவிடப்பட்ட உயர்மட்ட பாலப் பணிகளை உடனடியாகத் தொடர வேண்டும். இல்லை என்றால் தற்போது தற்காலிகமாக  மாணவர்கள்  நலன் கருதி பள்ளிக்குச் செல்ல மாற்று வழிவகைச் செய்து தரவேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டபோது, “தற்போதுதான் புதிதாக வந்துள்ளேன். நிச்சயம் உடனடியாக விசாரித்து அந்த பள்ளி மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்