கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ளது ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதி. இந்த தொகுதி முழுக்க முழுக்க கிராமப்புறங்களை உள்ளடக்கிய தொகுதியாகும். ஏற்கனவே விழுப்புரம் மாவட்டத்திலிருந்த இந்த தொகுதி கடந்து 2019ல் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டபோது அதில் சேர்க்கப்பட்டது. எனவே அதிலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த தொகுதி அமைந்துள்ளது. இந்த தொகுதியில் 250க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ள மக்கள் வாழும் இப்பகுதியில் பெரிய அளவில் தொழிற்சாலை, கல்வி நிறுவனம் இல்லை. இங்குள்ள கிராமங்களில் வாழும் மக்கள், நல்ல மருத்துவ வசதி வேண்டுமென்றால் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் போன்ற நகரங்களுக்குத் தான் செல்ல வேண்டும். இந்த தொகுதியின் மையப் பகுதியில் உள்ளது வாணாபுரம் பகண்டை கூட்ரோடு. இங்கு தான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், காவல் நிலையம், சுகாதார நிலையம் ஆகியவை உள்ளன. இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தான் சிகிச்சைக்கு வரவேண்டும். ஆனால், இந்த சுகாதார நிலையத்தில் 15 படுக்கைகள் மட்டுமே உள்ளன.
அதே போல் போதிய அளவில் மருத்துவர்களும் செவிலியர்களும் இல்லை. இந்த பகுதி கிராமப்புறங்களில் உள்ள சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், நாள்பட்ட நோய் பாதிப்புள்ளவர்கள் பல தரப்பினரும் சிகிச்சைக்காகவும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காகவும் இங்கு வந்து செல்கிறார்கள். இங்கு போதிய மருத்துவ வசதி, படுக்கை வசதி, மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாததால், மற்ற பிரச்சனைகளுக்காக இங்கு வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற நகரங்களில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்கே அனுப்பப்படுகின்றனர். இப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெறும் வகையில் பகண்டையில் செயல்பட்டு வரும் இந்த சுகாதார நிலையத்தை 24 மணி நேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும், ஒரு தாலுகா அளவில் உள்ள தலைமை மருத்துவமனை போன்று இந்த சுகாதார மையத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுகின்றனர். கிராமப்புறங்களில் வாழும் மக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களைத் தீட்டி வருகிறது. அதிலும் தற்போது கரோனா போன்ற கொடிய நோய் பரவல் காரணத்தினால் சிகிச்சை பெறுவதற்காகக் கிராமப்புறங்களிலிருந்து பெரிய நகரங்களில் உள்ள மருத்துவமனைக்குச் செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் நீண்ட தூரம் செல்வதற்குள் சிலர் உயிர் இழக்கவும் நேரிடுகிறது.
மேலும் கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தங்கள் வயல்களில் வேலை செய்யும்போது விஷக்கடிகளுக்கும் ஆளாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுவது சிரமமாக உள்ளது. சுகாதாரத்தை மேம்படுத்த மருத்துவமனையாக தரம் உயர்த்தினால் விஷக்கடிக்கு மருந்து கிடைக்கும். இதனால், கிராமப்புறங்களில் பாதிக்கப்படுபவர்கள் உடனடியாக வந்து சிகிச்சை பெற்று உயிர் பிழைக்க முடியும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு இப்பகுதி மக்கள் மீது சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்கள், இரு தினங்களுக்கு முன்பு கரோனா ஆய்வுப் பணிக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களிடம் பகண்டை சுகாதார நிலையத்தை மருத்துவமனையாகத் தரம் உயர்த்துமாறு கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே தமிழக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் இதுபோன்ற கிராமப்புறங்கள் சூழ்ந்த பகுதிகளில் உள்ள சுகாதார நிலையங்களை அரசு மருத்துவமனையாக மேம்படுத்தி போதிய அளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் படுக்கை வசதிகள் அதற்கான கட்டிடங்கள் ஆகியவற்றை விரிவுபடுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதன் மூலம் ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்ற பழமொழிக்கேற்ப கிராமப்புற மக்களின் வாழ்க்கை அமையும் என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள்.