சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி (தனி) கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில் அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. தொகுதி சீராய்வுக்கு முன் கடந்த 1957ம் ஆண்டு முதல் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில், சிதம்பரம் தொகுதியில் அதிகபட்சம் காங்கிரஸ் 6 முறை, தி.மு.க., 4 முறை, பா.ம.க., 3 முறையும், அ.தி.மு.க., 2 மற்றும் வி.சி.,கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
1957ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்., கட்சியின் கனகசபை பிள்ளை, அதே ஆண்டில் நடந்த தேர்தலில் இளையபெருமாள், 1962 -ல் கனகசபை பிள்ளை வெற்றி பெற்றனர். 1984 - 1991 வரையில் நடந்த மூன்று தேர்தல்களில் வள்ளல்பெருமான் வெற்றி பெற்று சிதம்பரம் தொகுதியை கையில் வைத்திருந்தார்.1967 மற்றும் 1971 தேர்தலில் தி.மு.க., மாயவன் எம்;பி.,யாக இருந்தார். 1980ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க., குழந்தைவேலுவும், 1996ல் தி.மு.க., சார்பில் கணேசனும் போட்டியிட்டு எம்.பி., யாக வெற்றி பெற்றனர். 1998 தேர்தலில் பா.ம..க, தொகுதியை கைப்பற்றி, 2004 வரையில் மூன்று முறை பா.ம.க., வெற்றியை தக்க வைத்திருந்தது. தலித் எழில்மலை ஒரு முறையும், பொன்னுசாமி இருமுறையும் எம்.பி.,யாக இருந்தனர். 1977 தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டி இட்ட முருகேசனும், 2014 தேர்தலில் அ.தி.மு.க., சந்திரகாசியும் வெற்றி பெற்றனர்.நான்கு முறை தொடர்ந்து போட்டியிட்ட வி.சி., கட்சி, 2009 தேர்தலில் முதல் முறையாக வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் திருமாவளன் எம்.பி.,யாக இருந்தார்.
சிதம்பரத்தில் மூன்று முறை வெற்றி பெற்று தொகுதியை கோட்டையாக வைத்திருந்த பா.ம.க., இந்த தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட விரும்பாமல் பின்வாங்கியுள்ளது. இந்த முறை திமுக தலைமைமையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் சிதம்பரத்தில் சுயேச்சை சின்னத்தில் விடுதலை சிறுத்ததைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் 5-வது முறையாக போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டம் அங்கனூர் கிராமத்தில் தொல்காப்பியன், பெரியம்மாள் ஆகியோருக்குக் கடந்த 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி பிறந்தார். பி.எஸ்ஸி வேதியியல், எம்.ஏ. கிரிமினாலஜி, பி.எல், பி.ஹெச்டி படித்துள்ளார். மேலும், தமிழக அரசின் தடவியல் துறையில் அறிவியல் உதவியாளராக பணியாற்றி வந்தார். பின்பு 1999-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட தன் அரசுப் பணியை ராஜினமா செய்தார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இவருக்கு எதிராக அ.தி.மு.க. சார்பில் அரியலுர் ஒன்றிய முன்னாள் அதிமுக செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுகிறார். இவர் அரியலூர் மாவட்டத்தில் உணவகம் மற்றும் லாட்ஜ் நடத்தி வருகிறார். சென்னை கோயம்பேடு பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.
அதே போல் அ.ம.மு.க சார்பில் வழக்கறிஞரும்,ஐ.எ.எஸ். அகாடமி நிறுவனருமான இளவரசன் போட்டியிடுகிறார்.
வெற்றிக்கனி யாருக்கு என களம் தான் முடிவு செய்யபோகிறது. விரைவில் கள நிலவரம் குறித்து சந்திப்போம்.